மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

பரண் 20 கறுப்புப்பண மீட்பா? கறுப்புப்பண பாதுகாப்பா?


கறுப்புப் பணத்தை மீட்பதற்காகவும், கள்ளப் பணத்தை ஒழிப்பதற்காகவும் மத்திய அரசு, 2016 நவம்பர் 8 ஆம் நாள் 500, 1000 ரூபாய் நோட்டுகள் மீதான பணமதிப்பு நீக்கத்தை அறிவித்ததுடன், 2000 ரூபாய் புதிய ரூபாய் நோட்டையும் அறிமுகப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து நாடுமுழுவதும் "அறிவிக்கப்படாத பொருளாதாரத் தடை' நிலவியது. மக்கள் பட்ட துயரங்கள் அளவிட இயலாதது. இந்த திடீர் நடவடிக்øகயின் பாதிப்பால் கோடிக்கணக்கான மக்கள் பாதிப்புக்கு உள்ளாயினர். தொழில்கள் முடங்கின. நாடே நடுவீதியில் நின்றது. நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 12 வங்கி ஊழியர்கள் உயிரிழந்தனர்.

"மூன்று நாள்கள் மட்டும் பொறுத்துக்கொள்ளுங் கள்' என்றார் பிரதமர். மத்திய நிதியமைச்சரோ 3 முதல் 4 வாரங்கள் வரை பொறுத்துக் கொள்ளுங்கள் என்றார். "இல்லை... 50 நாள்களுக்குள் நிலைமை சரியாகி விடும்' என்று மீண்டும் பேசினார் பிரதமர் மோடி. அதனைத் தொடர்ந்து நாளொரு அறிவிப் பும், பொழுதொழு அறிக்கையுமாக மக்கள் உணர்வுகளோடு விளையாடியது மத்திய அரசு. இந்திய ரிசர்வ் வங்கி அறிக்கையின் படி 70 ஆயிரம் கோடி கறுப்புப் பணம் உள் நாட்டிலும், 80 இலட்சம் கோடி வெளிநாடுகளிலும் உள்ளன. ஆனால் வெளிநாட்டு வங்கிகளிலுள்ள கறுப்புப்பணத்தை மீட்டெடுக்காமல் மக்கள் தங்களின் சொந்த உழைப் பினால் சம்பாதித்த பணத்தை எடுக்க இயலாமல் திண்டாடிய கொடுமை உலகின் எந்தப் பக்கத்திலும் இல்லாத கொடுமை.

அதானி, அம்பானி, மல்லைய்யா போன்ற கார்ப்ப ரேட் முதலைகளுக்கு வங்கிகளிலிருந்து 12 இலட்சம் கோடி அளவிற்கு கடன் கொடுத்துவிட்டு அதனை திருப்பி வாங்க இயலாமல் வாராக்கடன் பட்டியலில் சேர்த்துவிட்டு, ஏழை பாளைகளின் வயிற்றில் அடித்த வன்செயல் இந்திய வரலாற்றின் கறும்புள்ளி. 86.6 விழுக்காடு புழக்கத்திலுள்ள 17,60,000 கோடி மதிப்பிலான நோட்டுகளை செல்லாததாக அறி வித்த மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு கறுப்புப் பண முதலைகளும், சினிமா நட்சத்திரங்களும் ஆதரவளித்த போதே இந்த கறுப்புப்பண ஒழிப்பின் இலட் சணம் தெரிந்துவிட்டது. முறைசாரா வணிகத்தின் மூலம் 45 விழுக்காடு எஈஆ வளர்ச்சியும், 80 விழுக்காடு வேலை வாய்ப்பும் இதன் மூலம் கிடைத்துக் கொண்டிருந்தது.

இதில் மண்ணள்ளிப்போட்டு விட்டுத்தான் பிரதமர் மோடி "கறுப்புப்பண மீட்பு' என பாடல் இசைத்துக் கொண் டிருக்கின்றார். ஒரு விழுக்காட்டினரிடம் நாட்டின் 53 விழுக்காடு சொத்துக்கள் இருப்பதை மத்திய அரசு நன்கு அறிந்திருந்தும் அந்த கார்ப்பரேட்டுகள் மீது தூசுகூட படவிடாத கார்ப்பரேட் அடிமை அரசுதான் கறுப்புப்பண ஒழிப்பு நாடகத்தை அரங் கேற்றியிருக்கிறது. கறுப்புப்பணம் 6 விழுக்காடு மட்டுமே ரொக்கப் பணமாக இருக்கிறது. மற்றவை பங்குச் சந்தையிலும், நிலங்கள் வாங்குவதிலும், ரியல் எஸ்டேட்டிலும், நகைகளாகவும் கறுப்புப்பணம் உற்பத்தியாகிக் கொண்டும், சுழன்று கொண்டிருக்கின்றன என்பதை பொருளாதாரக் கணக்கு அறியாத எளிய மனிதனால்கூட விளங்கிக் கொள்ள முடியும். 94 விழுக்காடு கறுப்புப்பணச் சுழற்சியை பாதுகாக்க 6 விழுக்காடு கறுப்புப்பண ரொக்கத்தை முடக்குவதற்காக பணமதிப்பு நீக்க நடவடிக்கை என்பது கறுப்புப்பண ஒழிப்பு நடவடிக்கை அல்ல.

கறுப்புப்பண பாதுகாப்பு நடவடிக்கையாகவே எண்ணத் தோன்றுகிறது. உண்மையில் கறுப்புப்பணத்தை ஒழிக்க பண மதிப்பு நீக்கத்தைக் கடைப்பிடித்திருந்தால் 500, 1000 என்ற உயர்மதிப்பிலான பணத்தின் மதிப்பை நீக்கிவிட்டு அதனைவிட குறைவான நோட்டுகளைப் புழக்கத்தில் விட வேண்டும். ஆனால் 500, 1000 நோட் டுக்குப் பதிலாக 2000 ரூபாய் புதிய நோட்டை புழக்கத்தில் விட்டது கறுப்புப்பணத்தை எளிய முறையில் பாதுகாப்பதற்கும், பதுக்குவதற்குமான முயற்சி என்று தான் கருத முடிகிறது. உள்நாட்டிலிருந்து வெளிநாட்டிற்கு அனுப்பு வதற்கு 75 ஆயிரம் அமெரிக்க டாலராக இருந்த தொகை மோடி பிரதமரானதும் 2.5 இலட்சம் அமெரிக்க டாலராக அதிகரிப்பதிலிருந்தே மோடி யின் கறுப்புப்பண மீட்பின் இலட்சணத்தை உல கமே நன்கறியும். மொரிஸியஸ் தீவின் வழியாக நடமாடும் கறுப்புப்பணத்தின் மதிப்பை உலகம் மூக்கின்மேல் விரல்வைத்து வியக்கிறது. பனாமா பேப்பர் அமிதாப்பச்சன் உள்ளிட்ட கறுப்புப்பண பதுக்கல்காரர்களை பட்டியலிட்டிருந்தது.

அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் துணிவில்லாத கார்ப்பரேட் முதலாளிகளின் ஏவலாளியான மோடி அரசு எடுத்த கறுப்புப்பண மீட்பு கபட நாடகத்தை மக்கள் அறிந்துகொள்ளக்கூடாது என்பதற்காகவே ஏராளமான அறிவிப்புகளும், வாய்ஜால வார்த்தைகளும்...! உண்மையில் கறுப்புப் பணத்தை மீட்கவும், கள்ளப் பணத்தை ஒழிக்கவும் அரசு நினைத்திருந்தால் கார்ப்பரேட்களின் காலரைப் பிடித்திருக்க வேண்டும். கோடிக்கணக்கில் வங்கிகளில் கடன்பெற்று ஓடி ஒளிபவர்களைப் பிடித்திருக்க வேண்டும். வெளி நாடுகளில் பதுக்கிவைக்கப்பட்ட கோடிக்கணக்கான கறுப்புப் பணத்தை மீட்க முயற்சித்திருக்க வேண்டும். 2000 ரூபாய் நோட்டை வாபஸ் பெற்று குறைந்த மதிப் பிலான நோட்டுகளை அறிமுகம் செய்ய வேண்டும். அதற்குத் துணியாத மக்கள் விரோத மோடி அரசு எளிய மனிதர்களை வாட்டி வதைக்கிறது. இதற்கு காலம் ஒரு நாள் நிச்சயம் பதில் சொல்லும். அதுவரை மோடி அரசு கறுப்புபணத்தை மீட்கவும், ஒழிக்கவும் துருக்கி போன்ற நாடுகளிலிருந்து பாடம் பெற வேண்டும். அந்த அழகிய பாடத்தை சமரசம் 25 ஆண்டுகளுக்கு முன்பே உரத்துச் சொல்லியிருக்கிறது. அந்த அழகிய பாடத்தை இந்த பரண் தொடர் பதிவு செய்கிறது.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர பரண்

மேலும் தேடல்