ஜெர்மானியர்களின் ஒரு பிரிவினரும் பால்டிக் கடலுக்கும் விஸ்தூலா, ஓடர் ஆகிய நதிகளுக்கிடையே யும் வாழ்ந்து வந்தவர்களை வாண்டல் ஜாதியினர் என்பர். இவர்கள் கி.பி. 455 இல் ரோமபுரிக்குள் புகுந்து நகரைக் கொள்ளையிட்டு, நகரின் புனிதச் சின்னங்களை அழித்து, கøலயுணர்வுள்ள அனைத்தையும் சின்னாபின்னப்படுத்தி ரோம நாகரிகத்தின் அழிவுக்கு ஓர் காரணமாயினர். ஆகவே வேண்டுமென்றே பொருள்களை அழிக்கும் தன்øமயையும், கலைஉணர்வின்றி செய்யும் அட்டூழியங்களையும் மொத்தமாக வாண்டலிஸம் (திச்ணஞீச்டூடிண்ட்) என்பர். இன்று இந்தியா முழுவதும் குறிப்பாகத் தமிழ் நாட்டிலும் இந்த அழிவுத்தன்மையை குறிப்பாக நாம் ஒட்டிவரும் போஸ்டர்களில் காணலாம். இப் போஸ்டர்கள் அவசியமா என்பது ஒருபுறமிருக்க, இந்தப் போஸ்டர்களின் இலட்சணம் எப்படியிருக்கிறதென்றால், " நெஞ்சு பொறுக்குதில்லையே, இந்த நிலைகெட்ட மாந்தரை நினைந்துவிட்டால்' என்றபடி நம் நெஞ்சம் உடைபட்டுப்போகிறது. இப்பொழுதெல்லாம் கட்சிகள் குட்டி போடுவது சர்வ சாதாரணம். இந்தக் குட்டிகளின் தலைவர்கள், காரியதரிசிகள், அங்கத்தினர் உள்பட அனைவருமே நியமனம் பெறுபவர்கள்தான். ஏன், தலைவரே தன்னைத்தானே நியமித்துக் கொள்பவர்தாம். கட்சிகள் குட்டிபோட்டவுடனேயே பல வர்ணங்களில் போஸ்டர்கள் தயாரித்து "நோட்டீஸ் ஒட்டாதே' என்று எங்கெல்லாம் எழுதியுள்ளார்களோ, எங்கெல்லாம் நன்றாக வெள்ளையடித்திருக்கின்றார்களோ அங்கெல் லாம் "நியமனத்திற்கு நன்றி, தேர்வுக்கு நன்றி' என்று ஒட்டுவார்கள். விவஸ்தையின்றி எதை எங்கு ஒட்டுவது என்றில்லாமல் ஒட்டுவார்கள். குறிப்பாக பேருந்து நிற்குமிடங்களில், பேருந்து எண்கள் எழுதியுள்ள இடங்களில், பொதுக்கழிப்பிடங்களில் ஆண் பெண் என்று எழுதியும் படமும் போட்டவற்றின் மேல் போஸ்டர்களை ஒட்டி மறைத்து மக்களைத் திண்டாட வைப்பது இவர்களுக்குக் கொண்டாட்டம்.
தற்காலத்தில் சினிமா நடிகர்களுக்கென்று மன்றங்களும், நற்பணி மன்றங்களும் உண்டு. ஒவ்வொரு தெருவிலும் அவை பணி செய்து கொண்டு இருக்கும். அவர்கள் செய்யும் நற்பணி தனக்குப் பிடித்தமான நடிகனைத் தெய்வம், தர்ம தேவதை, தர்ம ராஜா, இதய தெய்வம், வீராதி வீரன், நடிப்புலக மன்னன், வானத்தை வில்லாக வளைப்பவன், மணலைக் கயி றாகத் திரிப்பவன் என்றெல்லாம் வர்ணித்து அந்த நடிகர் நடித்த படம் எவ்வளவு வசூலைப் பெற்றது, எத்தனை நாள் ஓடிற்று, எத்தனைபேர் பார்த்தார்கள், யாரோடு நடித்துப் புகழ் பெற்றார்கள் என்றெல்லாம் சிறிதும் வெட்கமின்றி போஸ்டர்கள் அடித்து ஒட்டி நாட்டைப் பாழாக்குகின்றார்கள். ஒரு தலைவர் அரசாங்கச் செலவிலோ அல்லது தமது சொந்தச் செலவிலோ அயல் நாட்டிற்குச் செல்கிறார் என்றால் உடனே "வாழ்த்தி வழி அனுப்பு கிறோம்' "சென்று வருக, வென்று வருக' என்று ஏதோ போருக்கு வழி அனுப்புவது போன்று போஸ்டர்களும், அதே ஆசாமி திரும்பி வரும் நாளை எண்ணிக் கொண்டிருந்து "தாயகம் திரும்பும் வேந்தே' "கலைமகனே, தலைமகனே, அலைமகனே வருக' என்றெல்லாம் போஸ்டர்கள் ஒட்டி மக்கள் தங்களது நன்றிக் கடனைத் தீர்த்துக் கொள்கின்றார்கள். மதுரையில் ஓரிடத்தில் மூவேந்தர் பாசறை என்று ஒரு போஸ்டர். மூவேந்தர் என்றால் தமிழ்நாட்டில் சேர, சோழ, பாண்டியர்களையே குறிக்கும். ஆகவே அவர்கள் பெயரால் அந்தப் பாசறையாகிய சங்கத்தை அமைத்துள்ளார்கள், என்று நினைக்க அச்சங்கம் தமிழகத்து அரசியல் அலங்கோலத்திலுள்ள மூன்று தலைவர்களையே குறிக்கும் என்றறியும்போது வெட்கமாகத்தானிருக்கிறது.
சமீப காலத்தில் பலர் தங்களைத் தமிழர் தலைவர், தமிழர் காவலர், தமிழர் தளபதி, மக்கள் தளபதி, மக்கள் தலைவன், அஞ்சா நெஞ்சன், புரட்சி வீரன், மாவீரன், மக்கள் கலைஞன் போன்ற பட்டங்களைப் பெற்று விளங்குகிறார்கள். இந்தப் பட்டங்களைத் தாங்கி திடீர் திடீரென்று போஸ்டர் போட்டு பொது மக்களிடையே பெருங்குழப்பத்தை உண்டுபண்ணுவ÷தாடல்லாமல், இத்தகையை பட்டப் பெயரால் யாருக்கு நன்மை என்று தெரியாமல் மக்கள் விழிக்கின்றார்கள். இத்தகைய போஸ்டர்களுக்கிடையில் நாளொரு படமும், பொழுதொரு சினிமாவுமாக அரசாங்க ஆதரவிலே வளர்ந்து வரும் சினிமா போஸ்டர்கள் பளிச்சென்று நிர்வாண, அரை நிர்வாண படங்களைத் தாங்கி சுவர்களில் ஆட்சி புரிந்து கொண்டிருக்கும். சினிமா போஸ்டர்களை எங்குதான் ஒட்ட வேண்டும் என்ற வரைமுறையே இல்லாமல் பள்ளி வாசல்கள், சர்ச்சுகள், ஆலயங்களின் அருகிலும், ஏன் அவற்றின் சுவர்களிலும் ஒட்டிச் செல்வார்கள். என்னே, இவர் களின் கலையுணர்வு! அது மட்டுமின்றி பெரிய சாலைகளின் பக்கங்களில் பெரிய போஸ்டர்களை ஒட்டி வாகன ஓட்டிகளை ஈர்த்து விபத்துக்குள்ளாக்குவதற்கும் இவர்கள் உதவி செய்வார்கள். சில மத்தியக் கிழக்கு நாடுகளில் சினிமா போஸ்டர்கள் சினிமா கொட்டகையில்தான் இருக்கும். ஊரெல்லாம் ஒட்டி சந்தி சிரிக்கவைக்க மாட்டார்கள். என்ன சினிமா ஓடுகிறது என்பதை அறிய, சினிமாப் பிரியர்கள் அங்கு சென்று விசாரிக்க வேண்டும். அல்லது தொலைப்பேசியின் மூலம் தெரிந்து கொள்ள வேண்டும்.
நம் நாட்டில் ஜனநாயகம் என்ற போர்வையில் எங்கும் போஸ்டர் ஒட்டித்திரிய ஆரம் பித்து விட்டோம். இந்தியா தொழிலில் முன்னேற ஆரம்பித்த பிறகு தொழிலாளர் பிரச்னைகளும் கூடவே முன்னேறி வருகின்றன. ஒரு தொழிலில் பிரச்னை என்றால் அந்தப் பிரச்னையைப் போஸ்டராக்கி அந்தத்துறையில் மட்டுமின்றி ஊர் முழுவதும் ஒட்டிக் கும்மாளம் போடுகிறார்கள். ஒரு தொழிற்சங்கத் தலைவர் சமீபத்தில் ஒரு கூட்டத்தில் பேசும்போது "முன்பெல்லாம் நாம் தொழிற் சங்கம்' அமைத்துப் போராடினோம். தற்காலத்தில் "சங்கத் தொழில்' செய்து வருகிறோம், என்ற கசப்பான உண்மையை ஒப்புக்கொண்டு பேசினார். "அரசன் எவ்வழியே அவ்வழியே குடிகன்' என்பது பழமொழி. மாணவர்கள் என்ன சும்மாவா இருப் பார்கள். " நம் தலைவர்கள் எப்படியோ அப்படியே நாம்' என புதுமொழி சமைத்து அரசியல்வாதிகளைப் பின்பற்றி கல்லூரித் தேர்தல் என்ற விழா நடத்த போஸ்டர்களில் தப்பும், தவறுமாக எழுதி, தலைவர்கள் என்று சொல்லப்படுபவர்களைப் படம் போட்டு தங்கள் கல்லூரிச் சுவர்களிலும், நகரமெங்கும் ஒட்டி "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்று இன்புறுவார்கள். புற்றீசல்கள் போலத் தோன்றிவரும் நர்சரி பள்ளிகளும் ஆங்கிலப் பள்ளிகளும் தங்களைத் தாங்களே புகழ்ந்து பல போஸ்டர்கள் தயார் செய்து ஒட்டி தங்கள் பங்கையும் இந்தப் போஸ்டர் பந்தயத்தில் ஈடு படுத்திக் கொள்வார்கள். இந்தப் போஸ்டர் பந்தயத்தை நிறுத்த அரசாங்கம் உடனே முன்வர வேண்டும். ஆபாச விளம்பர போஸ்டர்களுக்கு எக்காரணத்தைக் கொண்டும் அனுமதி அளிக்கக் கூடாது. ஜனநாயகப் போர்வையில் வெளிவரும் "ஏ' என்ற சினிமாக்களை உடனே தடை செய்ய வேண்டும். "ஏ' சினிமா ஒழிக்கப்பட்டால் நாடு குடி முழுகிவிடாது. "ஏ' சினிமா எடுப்பவர்களுக்குச் சட்டம் துணை செல்லாதவாறு சட்டத்தைத் திருத்தினால் நாடு உருப்படும். "என்று தணியும் இந்த சுதந்திர தாகம்' என்றார் பாரதியார். "என்று தணியும் இந்த போஸ்டர் மோகம்' என்று பாடுவார் அவர் இன்று நம்மிடையே இருந்திருந்தால்!

முக்கிய சுவரொட்டிகள் அவசியம்தான். ஆனால் அவற்றின் இடத்தை இந்தத் தன்மானத் தலைவர்கள் ஆக்கிரமித்துக் கொள்கின்றார்கள். தமிழகம் ஆக மோசம். கட் அவுட்களால் பாதசாரி கள் படும் தொல்லைகள் சொல்லிமாளாது. இந்த கட் அவுட் கலாச்சாரத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வராதா என்று ஏங்கினாலும் எல்லாருமே அதனைக் கடந்து சென்று கொண்டிருக்கின்றோம். டிராபிக் ராமசாமி குரல் கொடுக்கிறார். சாலையில் அமர்கிறார். சண்டை போடுகிறார். வழக்குத் தொடர்கிறார். சில நேரங்களில் வெல்கிறார். சில நேரங்களில் அடியும் வாங்குகிறார். இராயப்பேட்டை, லாயிட்ஸ் சாலையிலுள்ள அ.தி.மு.க. அலுவலகத்தின் முன் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா பேனரையும், அதற்கு எதிரே பஸ் நிலை யத்தை மறைத்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா விளம்பர பேனரையும் அகற்றுமாறு 2015 மார்ச் 19ஆம் நாள் டிராபிக் ராமசாமி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தார். அதைத் தொடர்ந்து மாநகராட்சி ஊழி யர்கள் அந்த பேனர்களை அகற்றினர். 2016 ஆகஸ்ட் 24 சென்னை அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் மருத்துவப் படிப்பு களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. அதனையொட்டி நுழைவுவாயில் முன்பு ஜெயலலிதாவின் படம் இடம்பெற்ற பேனர் வைக்கப்பட்டது. டிராபிக் தலையிட்டார். சாலையில் அமர்ந்தார்.
இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். சட்ட விரோதமாகவும், விதிமுறைகளுக்கு எதிராகவும் டிஜிட்டல் பேனர்கள், கட்அவுட்டுகள் வைக்க உயர் நீதிமன்றம் தடை விதித்தது. அண்மையில் சென்னையில் இருந்து ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடைபெறும் நெடுவாசல் கிராமத்துக்கு பயணம் சென்றார் டிராபிக் ராமசாமி. செல்லும் வழியில் மேல்மருவத்தூரைக் கடக்கும்போது அங்கு மார்ச் 3ஆம் நாள் நடைபெற உள்ள பங்காரு அடிகளார் பிறந்த நாளுக்காக சாலையோரம் பெரிய, பெரிய பேனர்களை வைத்து போக்குவரத்திற்கு பெரும் இடையூறு ஏற் படுத்தியதைக் கண்டு கொதிப்படைந்தார் ராமசாமி. உடனே அங்கிருந்த போக்குவரத்தை சீர் செய்யும் காவலர்களிடம் பொது மக்களுக்கு ஆபத்தான நிலையில் இவ்வளவு உயரத்தில் பதாகைகள் வைக் கப்பட்டுள்ளது இதனை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். தொலைப்பேசி மூலம் உயரதிகாரிகள் சிலரிடமும் இது குறித்து தெரிவித்தõர். முதல மைச்சர் பேனரை அகற்ற முடிந்த இராமசாமியால் சாமியாரின் பேனரை நகர்த்த முடியவில்லை. மிரட்டலும், அடியுமே மிஞ்சியது.
