""முஹம்மத் அஹ்மத்கான் ஷா பானு வழ்க்கில் சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள தீர்ப்பு முஸ்லிம் களுக்குப் பெரும் தீங்காக இருக்கிறது. ஆனால் அந்தத் தீங்கிலிருந்தும் நன்மைக்கான பல அம் சங்கள் தோன்றியுள்ளன. நாடு முழுக்க "ஷரீஅத்தைப் பாதுகாப்போம்' என்ற உணர்வு முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளது. அரசியல் அமைப்பின் 44 ஆவது பிரிவு, குற்றவியல் சட்டத்தின் 125 ஆவது பிரிவு ஆகியவற்றிலிருந்து முஸ்லிம்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பலமாக எழுந்துள்ளது. அரசிடம் கோரிக்கை வைப்பதும், நீதிமன்றத்திற்கு எதிராகக் குரல் எழுப்புவதும் மட்டும் ஷரீஅத் பாதுகாப்புக்குப் போதுமானவையல்ல. முஸ்லிம்கள் மீது ஏற்படும் பொறுப்புகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். இது தொடர்பாக முஸ்லிம்கள் மீதுள்ள சில பொறுப்புகளை இச்செயற்குழு சுட்டிக்காட்ட விரும்புகிறது:
1. முஸ்லிம்கள் ஷரீஅத்தின் விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றி வாழவேண்டும். திரு மணம் விவாக விலக்காக இருந்தாலும் சரி, மஹர் மற்றும் "இத்தா' காலப் பராமரிப்பாக இருந்தாலும் சரி, வாரிசுரிமைப் பிரச்னையாக இருந்தாலும் சரி, இஸ்லாமியச் சட்டங்களை முறையாகக் கடைப் பிடிக்க வேண்டும். ஏனெனில் மேற்சொன்ன விஷ யங்களின் சட்டத் தொகுப்புதான் முஸ்லிம் தனியார் சட்டம் என்று கூறப்படுகிறது. இது ஷரீஅத்தின் பிரிக்க முடியாத ஒரு பகுதியாகும். இந்த ஷரீஅத்தைப் பாதுகாக்கவே முஸ்லிம்கள் துடிப்புடன் முன்வந்தனர் என்றால், அவர்கள் ஒவ்வொருவரும் தத்தம் வீடு களில் முதலில் ஷரீஅத்தைப் பின்பற்ற வேண்டும். கொள்கை அளவில் மட்டுமில்லாமல் செயல் ரீதி யாகவும் வாழ்ந்துகாட்டவேண்டும்.
2. இஸ்லாமிய அறிஞர்கள் மீது பெரும் பொறுப்பு உண்டு. பிற மதங்கள், சமுதாயங்களின் குடும்பவியல், வாழ்வியல் சட்டங்களுடன் இஸ்லாமியச் சட்டங் களை ஒப்பிட்டு, இஸ்லாம் நடைமுறை வாழ்வுக்கு எத்தனைப் பொருத்தமானது, நீதிமிக்கது என்பதை எல்லா மக்களுக்கும் தெளிவாக விளக்க வேண்டும். அதன் அறிவார்ந்த தன்மைகளை அனைவரும் புரிந்து கொள்ளும்வண்ணம் எடுத்துரைக்க வேண்டும். எந்த அளவுக்கு என்றால் இப் பிரச்னையை மக்கள் தெளிவாகப் புரிந்து கொண்டு ஷரீஅத் பாதுகாப்புக்கு அவர்கள் தாமாகவே முன்வந்து தோள் கொடுக்க வேண்டும். இதற்காக செய்தித் துறையின் அனைத்து வசதிகளையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சிற்றேடுகள், நூல்கள், கருத்தரங்குகள், ஆய்வுக் கூட்டங்கள் என்று எல்லா வசதிகளையும் பயன்படுத்தி செய்தியை மக்களுக்கு எட்டச் செய்ய வேண்டும்.
3. அகில இந்திய அளவில் ஷரீஅத் சட்டங் களுக்கேற்ப தீர்ப்பு அளிக்கும் ஓர் அமைப்பு ஏற்படும் வரை, ஆங்காங்கே சிறிய அளவில் கிராமங்களிலும் நகரங்களிலும் ஷரீஅத் பஞ்சாயத்து நிறுவப்பட வேண்டும். இப்பணி முதன்மையானது. முக்கிய மானது. 3 முதல் 7 பேர் வரை அதன் நடுவர்களாக இருக்கலாம். ஷரீஅத் பஞ்சாயத்து மூன்றுபேர் கொண்டதாக இருந்தால் ஒருவர் இஸ்லாமிய மார்க்கச் சட்டங் களை நன்கு அறிந்தவராகவும், இன்னொருவர் நடை முறையிலுள்ள சட்டங்களில் நிபுணத்துவம் பெற்ற வழக்கறிஞராகவும், மூன்றாமவர் அப்பகுதியில் கண்ணியமும், செல்வாக்குமுள்ள பிரமுகராகவும் இருக்க வேண்டும். இந்த அடிப்படையில் 7 நபர்கள் வரை நடுவர்களை ஏற்படுத்திக் கொள்ளலாம். இந்தப் பஞ்சாயத்திற்கான விதிமுறைகளும், சட்டங்களும் நாடு முழுவதும் ஒரேவிதமாக அமைக்க முயல வேண்டும்.
4. முஸ்லிம்கள் தங்களின் வழக்குகள் மற்றும் கருத்து வேறுபாடுள்ள பிரச்னைகளுக்கு ஷரீஅத் பஞ்சாயத்து மூலம் தீர்வு காண வேண்டும். இதற்காகவே ஓர் இயக்கம் நடத்தப்பட வேண்டும். எங்கெங்கே ஷரீஅத் பஞ்சாயத்து இருக்கிறதோ அங்கெல்லாம் மக்களுக்கு அதனை அறிமுகப்படுத்த வேண்டும்.
5. ஷரீஅத் பாதுகாப்பு குறித்து சீரியஸாகவும், அறிவுப்பூர்வமாகவும், விழிப்புடனும் முஸ்லிம்கள் இருக்க வேண்டும். மேடைப்பேச்சிலும், எழுத்திலும் தேவையற்ற ஆவேசமோ, கொந்தளிப்போ இருக்கக் கூடாது. அவை நம் நோக்கத்தைப் பாழாக்கிவிடும். ஆகவே ஆவேசம், கொந்தளிப்புகளிலிருந்து முஸ்லிம் கள் விலகியிருக்க வேண்டும்.
6. அல்லாஹ்வின் அருளால் முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தில் முஸ்லிம்களின் அனைத்து அமைப்பினரும் இணைந்துள்ளனர். இந்த ஒற்றுமை தொடர்ந்து பாதுகாக்கப்பட வேண்டும். இதைப் பாதிக்கும் எந்தச் செயலையும் செய்யக்கூடாது. முஸ் லிம் தனியார் சட்ட வாரியத்தில் அனைத்து அமைப்பு களுக்கும் சமமான பிரதிநிதித்துவம் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

"இலுமினாட்டிகளின் சதி, யூதர்களின் சதி, பாஜகவின் சதி, ஆர்.எஸ்.எஸ்ஸின் திட்டம், பன்னாட்டு முதலாளிகளின் சதித்திட்டம்' என்று எல்லாவற்றிற்கும் பிறர்மீது பழிபோட்டு நாம் எத்தனை ஆண்டுகாலம் தட்டிக்கழித்துக் கொண்டிருக்கப் போகின்÷றாம்? அவர்கள் சதி செய்யவில்லை என்று நாம் சொல்லவில்லை. ஆம்...! அவர்களுடைய வேலையை அவர்கள் செய்கின்றார்கள். பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவருவதற்கு அவர்கள் துடிக்கின்றார்கள். அதற்கான பெரும் முயற்சியில் இன்று ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து சட்டத்தைக் கையிலெடுக்கின்றார்கள். அவர்களைக் குற்றம் சாட்டி, உணர்ச்சிப்பிளம்பாக உரை முழங்குவதோடு நாம் நமது எதிர்ப்பை முடித்துக் கொள்ள வேண்டுமா? முஸ்லிம் சமுதாயம் சுயஆய்வுக்கு முன்வர வேண்டும். இன்றைக்கும் ஷரீஅத் விஷயத்தில் அரசும், நீதிமன்றங்களும் மூக்கை நுழைக்கின்றன என்றால் நம்மிடம் குறைகளே இல்லையா...? நம் சமுதாயத்தில் வரதட் சணை என்ற பெயரில் எத்தனை பெண்களை வதைத்திருக்கின்றோம்? வரதட்சணை வாங்கிபவர்களைத் தட்டிக் கேட்டு நாம் அந்தக் குற்றவாளிகளை சட்டத் தின் முன் நிறுத்தத் தயங்கினோம். அதன் விளைவைத் தான் இன்று காண்கின்றோம்.

எஸ்.எம்.எஸ்ஸிலும், வாட்ஸ் அப்பிலும் "தலாக், தலாக், தலாக்' என்று சொல்லி ஒரு பெண்ணின் வாழ்வை நிர்கதியாக்கி விட்ட சூழல்களில் நாம் என்ன செய்தோம்? பாதிக்கப்பட்ட பெண்ணின் குர லாக நாம் ஒலிக்கத் தவறினோம். அவர்கள் நீதிமன்றப் படிஏறினார்கள். நமது சொத்து பிரிப்பு முறைகளை நாம் இறைவன் அருளிய ஷரீஅத் சட்டப்படிதான் பிரித்துக் கொள்கின்÷றாமா? அல்லது ஊர் வழக்கப் படிதான் நமது தீர்ப்புகள் அமைகின்றனவா? ஷரீஅத் நமது உயிருக்கு மேலானது என முழங் கும் நாம் நமது நடைமுறை வாழ்வில் ஷரீஅத் சட்டங்களை எந்தளவு புரிந்து வைத்துள்ளோம்? அதனை அச்சு அசலாக நாம் நடைமுறைப்படுத்தி யிருக்கின்றோமா? நமது வீடுகளில், நமது அலுவல கங்களில், நமது மஹல்லாக்களில் ஷரீஅத்தின் அடிப்படையிலான செயல்பாடுகள்தான் நடைபெறுகின்றனவா? ஷரீஅத் சட்டங்களை நமது வாழ்வில் நாம், நடைமுறைப்படுத்தியிருந்தால் அதன் தேட்டத்தால் இந்த உலகம் அதன் பின்னால் நடைபோடத் துணிந் திருக்கும். ஷரீஅத் சட்டங்கள் இந்த மண்ணில் நடை முறைப்படுத்தப்பட்டிருந்தால் இந்த மண்ணிலிருந்து அநீதி விரட்டியடிக்கப்பட்டிருக்கும்.
ஷரீஅத் சட்டங்கள் எந்தளவு உயிர்ப்புடன் இருக்கின்றனவோ அந்தளவு இந்த உலகம் அமைதியில் திளைத்திருக்கும். ஷரீஅத் சட்டங்கள் செயல்வடிவம் பெறுகின்ற வேளையில் இந்த பூமி ஒழுக்க மாண்புகளால் மகிழ்ந் திருக்கும். ஏனென்றால் ஷரீஅத் சட்டம் என்பது முஸ்லிம் களை மட்டும் பாதுகாக்கும் சட்டம் அல்ல. இந்த மனிதகுலம் முழுவதற்கும் பாதுகாப்பை வழங்கும் மகத்தான ஏற்பாடுதான் அது. ஆம்...! ஷரீஅத் சட்டங்களை மனிதர்களைப் படைத்த இறைவனே அருளியுள்ளான். இறைவன் அருளிய சட்டங்கள் மனிதகுலத்தினை வாழ்விக்க, உய்விக்க வந்த சட்டம் என்பதை அது நடைமுறைப்படுத்தப்படும் போது உலகம் உணர்ந்து கொள்ளும். ஷரீஅத் சட்டம் நீதியை அடிப்படையாகக் கொண்டது. ஒழுக்க மாண்புகளின் மீது தான் ஷரீஅத் கட்டமைக்கப்பட்டிருக்கின்றது. ஷரீஅத் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட காலகட்டங்களில் யூதர்களும், கிறித்தவர்களும், இதர மதத்தினரும் "எங்களுக்கு நீதி வேண்டும். எனவே ஷரீஅத்தின் அடிப்படையில் எங்களுக்குத் தீர்வு வழங்குங்கள்' என்று நம்மைத் தேடிவந்தார்கள்.
இந்தியா போன்ற பன்மைச் சமூகத்தில் ஷரீஅத் அடிப்படையிலான நடைமுறைகள் உயிர்பெறும் போது இஸ்லாத்தின் மீதான தேட்டமும் மதிப்பீடும் பலமடங்கு உயரும். ஏனென்றால் ஷரீஅத் சட்டத்தின் மூலமே இந்த மண்ணில் நீதியையும், அமைதியையும் நிலைநாட்ட முடியும். நடைமுறை வாழ்வில் கடைப்பிடிக்காமல் "ஷரீஅத் சட்டம் என்றால் என்ன?'என்பதை நாம் எத்தனை உரத்து முழங்கினாலும் மக்களிடம் அது எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ஷரீஅத் சட்டத்தை நாம் செயல்வடிவில் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அத்தகைய தலையாய பொறுப்பு இன்றைய முஸ்லிம் சமுதாயத்திற்கு இருக்கிறது. ஷரீஅத் விசயத்தில் உணர்வுகளுக்கு நாம் முக்கியத்துவம் கொடுப்பதை விட பிரச்னைகளை உணர்ந்து கொள்வதற்குக் கொடுக்க வேண்டும். ஏனென்றால் ஷரீஅத் முஸ்லிம்களின் இறைநம்பிக்கை சார்ந்தது. அதனைப் பாதுகாப்பது முஸ்லிம்களின் கடமை. ஷரீஅத் சட்டத்தைப் பாதுகாப்பது என்பது அந்தச் சட்டத்திற்கு ஆதரவாகப் பதிவிடுவதும், கையெழுத்திடுவதும், குரல் கொடுப்பதும் மாத்திரம் அல்ல. அதனை நடைமுறைப்படுத்துவதுதான் அதனைப் பாதுகாக்கும் முதன்மை ஏற்பாடு. ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்திய அளவில் முஸ்லிம் தனியார் சட்டம் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தவும், ஷரீஅத் குறித்த தெளிவையும், விழிப்பு உணர்வை ஏற்படுத்தவும் ஏப்ரல் மாதம் 23 முதல் மே மாதம் 7 ஆம் நாள் வரை அகில இந்திய அளவில் ஷரீஅத் விழிப்பு உணர்வு பரப்புரை நடத்த உள்ளது. இது ஜமாஅத்தே இஸ்லாமி இயக்கத்திற்கான பரப்புரை அல்ல...! இது ஷரீஅத் குறித்த பரப்புரை. இது நமக்குக் காலம் தந்த வாய்ப்பு. வேறுபாடுகள் மறந்து, நமது உயிர் மூச்சான ஷரீஅத் சட்டத்தைப் பாதுகாக்கும் முயற்சியாக இந்தப் பரப்புரையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து களமிறங்குவோம். உலகை வழி நடத்திச் செல்வோம்.