மூன்றாவது மருமகள் ஹஸினாவும் வந்துவிட்டாள். முதல் மருமகள் போனாலும், இந்த இருவருடன் ஆமினாக்காவின் நேரமும் பொழுதும் கழிகிறது. சாதிக்காவுக்கு இரண்டும், ஹஸினாவுக்கு இரண்டுமாக பிள்ளைகள். ஆனாலும் சாதிக்காவின் முதல் மகனோடு ஒட்டிக் கொண்டாள். பெரியவன் வீட்டை விட்டுப் போனது, பெற்றோரை மறந்தது, அவனுக்கும் பிள்ளை இல்லாமல் இருப்பது, தன் கணவரின் இழப்பு எல்லாம் சேர்ந்து இவன் ஆமினாக்காவுக்கு வடிகாலாகி விட்டான்.
மார்க்கெட்டிலிருந்து ஆமினா வந்துவிட்டாள். சாலிஹாவின் பக்கத்தில் வந்து அமர்ந்தாள்.
‘ஹஸினா.. அந்த சொளவக் கொண்டு வா!’ வாங்கி வந்த பொருள்களைக் கொட்டி பிரித்தாள்.
‘அக்கா! நான் குழம்பு வைக்கிறேன்’
‘பின்ன! நாமதான் வைக்கணும். இவளுகளை நம்பி விட்டால் மதிய சாப்பாட்டை, சாயந்தரம் தருவாளுங்க! அடுப்படியை நாறஅடிச்சி, பிறகு நான்தான் போய் சுத்தப்படுத்தணும்’
‘இப்படி எத்தனை நாள் தான் கட்டிக் காப்பாத்துவீங்க? அவர்கள் பொறுப்பில் விட்டுட்டு பிள்ளைகளைப் பார்த்துக் கொண்டு இருங்கக்கா’
‘சாலிஹா! உனக்குப் புரியாது. கூட இருந்து பார்த்தாத்தான் தெரியும். இவ அவ செய்யட்டும்னு இருப்பா. அவ இவ செய்யட்டும்னு இருப்பா. வாயடிக்கச் சொன்னா வங்காள விரிகுடா வரைக்கும் பேசுவாளுங்க!’
‘நல்லா வேலை செய்யுறவ போய்ட்டா. பெரியபிள்ளை வீட்டோடு இருந்தால் இவனுகளுக்கும் கொஞ்சம் பயமும் மரியாதையும் இருக்கும். அவளைப் பார்த்தாவது இவளுங்களும் பழகுவாங்க’
சத்தார் போகவும், நான் ஏங்கிக் கிடந்தைப் பார்த்து இவனுக இருவருக்கும் ஒரே பந்தல்ல கலியாணத்தை எடுத்தாங்க உங்க மச்சான். அதே வேகத்துல அவுங்களும் போய்ச் சேர்த்துட்டாங்க. அவங்க இருந்தாலும் கொஞ்சம் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும்’
‘அக்கா! ஜன்னத்தோடு இவளுங்களை கம்பேர் பண்ணாதீங்க! போனவ கதைக்குப் புள்ளி வைய்ங்க. இருக்கிறவர்களின் திறமையைப்பார்த்து அவர்களை உற்சாகப்படுத்தி பழக்குங்க’
‘எத்தனை நாளைக்குதான் இப்படி நீங்களும் புலம்பி அவர்களையும் பயமில்லாமல் ஆக்குவீங்க?’
‘நீ என்னயதான் சொல்லுவே. அவளுங்களுக்குப் புத்திமதி சொல்லு..’
‘சாதிக்கா! மாமிக்கு டீ கொண்டு வாம்மா!’ உள்ளே குரல் கொடுத்தாள்.
‘இதோ ஜýஸ் கலக்கப் போறேன் மாமி’
‘பாத்தியா, எவ்வளவு நேரமாச்சி? கேட்ட பொறவு கலக்கப் போறேங்குறா. கேக்காட்டி இப்படியே ஓடும். நானாப் போய் ஊத்திக் குடிக்கணும்’
‘அக்காவுக்கு ஜýஸ் வேண்டாம்மா! எனக்கு டீ போட்டேல்ல. மீதமுள்ளதை சூடுகாட்டிக் கொண்டு வா!’
‘அதை ஹஸினா மகனுக்குக் கொடுத்துட்டா மாமி’
ஜýஸ் வந்தது. அக்கா குடித்தாள். ‘ஏது? நம்ம வீட்டுல கெடயாதே!’
‘இப்ப வரும்போது கொண்டு வந்தேன் மாமி. டேங்க் மாமி, அத்தா வீட்டுக்கு வாங்கி வந்தாங்க. அதில் மாம்பழ ஃபிளேவர் உங்களுக்குப் பிடிக்குமேன்னு ஒரு பாக்கெட்டை எடுத்து வந்தேன்’
சாலிஹா மெதுவாகக் கூறினாள், ‘அக்கா உங்கள் மீது கரிசனம் அவளுக்கு இருக்கிறது.
நீங்கள் அதை பயன்படுத்தி கொள் ளுங்கள். பொம்பளப் புள்ள இல்லாத நீங்க அவர்களைப் பெண் பிள்ளையாக மாற்றுங்கள்’ சொல்லிவிட்டு சாலிஹா அடுப்படிக்குச்
சென்றாள்.
‘சாதிக்கா! என்ன குழம்பு வைக்கலாம்?’
‘நீங்க சூப்பரா சமைப்பீங்களாம் மாமி சொன்னாங்க’
‘ஆமாம் எல்லாம் எங்க மாமி கற்றுக் கொடுத்தது. என் மச்சியும் எனக்கு எல்லாம் சொல்லித் தந்தாங்க. அவங்க இரண்டு பேர் மட்டும் இல்லைன்னா எனக்கு இவ்வளவு சுத்தமும், சமையலும் மற்ற வேலைகளும் பழகி இருக்கவே முடியாது’
‘நாங்க படிச்சிட்டு இருக்கும்போது கல்யாணம் முடிச்சுட்டாங்க மாமி! எங்களால் எந்த வேலையும் கற்றுக்கொள்ள முடியவில்லை. அது மட்டுமல்ல அடுத்தடுத்து பிள்ளைகளும் பெற்றுக் கொண்டோமா இந்தப் பிள்ளைகளைக் கவனிக்கவே நேரம் சரியாக இருக்கிறது. நானாவது பரவாயில்லை மாமி. ஹஸினாவுக்கு அறவே ஒன்னும் வர மாட்டேங்குது’
‘அப்படி ஒதுங்கவோ, ஒதுக்கவோ கூடாது சாதிக்கா! ஒவ்வொருவருக்குள்ளேயும், ஒவ்வொரு திறமை ஒழிந்து இருக்கு. நாம அதை வெளிக்கொண்டுவர வேண்டும். அதற்கு முயற்சி செய்ய வேண்டும்’
‘எங்க மாமிய மாதிரி வேலை செய்ய வரமாட்டேங்குதே? அவங்க சுறுசுறுப்புக்கு முன்னாடி எங்க வேலை பிசுபிசுத்துப் போகுது மாமி’
‘நல்லா பேசுற சாதிக்கா. நீ பேசும்போது உன்னைப் பாத்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு. பேச்சழகை, வேலையில் கொண்டு வந்தா போச்சு. நம்மால் முடியாது என்று நினைக்கும் ஒரு காரியத்தை, இன்னொருவர் தனக்கு முடியும் என்று செய்து சாதிக்கும்போது நம்மால் ஏன் முடியாது?’
‘வேலைக்காரி மாதிரி அதச்செய், இதச் செய்யின்னு தொடர்ந்து சொல்லுறாங்க! ஒரு வேல முடிஞ்சா அடுத்த வேலை, அது முடிஞ்சா அடுத்த வேலை. பகல்ல தூங்கக் கூட முடியல மாமி’
‘சாதிக்கா! மெதுவா பேசு! நீ ஏன் உன்னை வேலைக்காரியாக நினைக்கிற? நீ இந்த வீட்டின் தலைவி. மருமகள் என்ற பதவி உனக்குக் கிடைத்துள்ளது. அந்தப் பொறுப்பை நீ சரியாகச் செய்தால் எல்லோரும் மகிழ்வார்கள். உனக்கு அனுபவம் கூடும். எல்லோருக்கும் நீ முன்மாதிரி ஆவாய். அடுத்துள்ளவர்கள் உன்னிடம் யோசனைக் கேட்பார்கள். உன்னைப்பார்த்து ஹஸினாவும் படித்துக்கொள்வாள்’
சாதிக்காவின் நாடியைப்பிடித்து, ‘என் மீது ஏதும் வருத்தமா சாதிக்கா?’ என்று கேட்டாள் சாலிஹா.
‘இல்லை மாமி! பிறகு செய்யலாம் என்று உட்காருவேன். அதற்குள் மாமி செஞ்சிடுவாங்க!’
‘பரவாயில்லை. இனி அந்தந்த வேலையை அப்பப்ப முடித்து விடு. உனக்கே உன் வேலை பிடித்து விடும்’
ஹஸினா, சிங்க்கில் கிடந்த பாத்திரங்களைக் கழுவ ஆரம்பித்தாள். சாலிஹா கேட்டாள், ‘சாதிக்கா! அக்கா உட்காந்து கொண்டே உங்களை ஏவுகிறார்களா?’
‘சேச்சே! அப்படியெல்லாம் இல்லை மாமி! காலையில் எங்களை எழுப்பக்கூட மாட்டார்கள். அதிகாலையிலே எழுந்து தொழுது, குர்ஆன் ஓதி சாயாபோட்டு வச்சிட்டுதான்
உட்காருவாங்க. நாங்க எந்திரிச்சி, தொழுது சாயா குடிச்சிட்டுத்தான் மறு வேலை பாப்போம்’
‘பாத்தியா.. ஒரு தாய் மாதிரி நடக்கும்போது, நீங்களும் மகள்கள் மாதிரி நடந்தால் எல்லோர் மனதிலும் குறையில்லா மகிழ்வு நிலவும்’
‘நீயும், ஹஸினாவும் ஒரு டைம்டேபிள் போட்டு வச்சிக்குங்க! யார், யார் என்ன வேலை செய்யணும் என்று. ரொம்ப ஈசியாயிரும்’
‘எங்க ஹாஸ்டலில் இப்படித்தான் பிள்ளைகள் செய்கிறார்கள். நாற்பது பேர் இருக்கும் இடம். எவ்வளவு சுத்தமாக இருக்கும் தெரியுமா? இம்புட்டுக்கும் நிறைய பிள்ளைங்களுக்கு தாய்தகப்பன் கிடையாது. சொல்லிக் கொடுக்க ஆள் கிடையாது. ஆனாலும் எதைச் சொல்லிக்öகாடுத்தாலும் கற்பூரமாய் பற்றிக்கொள்வார்கள்’
பேச்சோடு பேச்சாக சாப்பாடு ரெடி யானது. சாலிஹா அடுப்புக்கட்டை சுத்தம் செய்வதைப் பார்த்தார்கள்.
‘சரி மாமி! நாங்களும் இனிமேல் இப்படியே செய்கிறோம். எங்களுக்கு ராத்திரிக்கு குஜராத் பிள்ளைகளின் கதையைச் சொல்லுவீங்களா?’
‘பாரு பாரு! பேசிகிட்டே சட்டி பிடிக்கிற துணியைக் கொண்டு இடத்தையெல்லாம் துடைக்கிறியே?’
‘ஏன் மாமி? துடைக்கக் கூடாதா?’
‘கையை மோந்து பாரு?’
சாதிக்கா, கைகளை முகர்ந்து பார்த்து விட்டு முகத்தைச் சுழித்தாள்.
இதுதான் வேலைகளின் வேறுபாடு. அடுப்பைத் துடைக்க, ஏதும் சிந்தினால் துடைக்க துணி வைத்துக்கொள்ள வேண்டும். சட்டிகளைப் பிடிக்கும் துணியை எதற்கும் புழங்கக்கூடாது’
‘அதுபோல காலையில் பாக்குறேன். ஹஸினா மகன் உச்சா போய்ட்டான். கால் மிதியடியைப் போட்டு துடைத்து விட்டு அதை மீண்டும் வாசலில் போட்டு விட்டாள். வீட்டுக்குள் வருபவர்கள் அதில் காலை துடைத்துவிட்டு உள்ளே வருவார்கள். வீடெல்லாம் நாறாதா?’ எல்லோரும் தொழுறீங்க தானே? சுத்தம் வேண்டாமா? சுத்தம் ஈமானில் பாதி இல்லையா? யோசிங்க! வாங்க தொழுது விட்டு சாப்பிடுவோம்’
அடுப்படியை விட்டு வெளியேறினார்கள் சாலிஹாவும், ஆமினாக்கா மருமகள்களும்.
(தொடரும்)