மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

மேடை

அக்கரைப் பச்சை - 32
-ஜரினா ஜமால் , Feb 1 - 15


சாலிஹா குஜராத் நிகழ்வைச் சொல்லத் தொடங்கினாள்.‘பெற்றோர்களின் கண்முன்னே பிள்ளைகள் வன்புணர்வு செய்யப்பட்டார்கள்.கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்து கருவை வெளியே எடுத்து வாளின் முனையில் குத்தி தரையில் அடித்த கொடுமையை எங்காவது கேள்விப்பட்டு இருக்கிறோமா?'

ஹஸினா சப்தமாகக் கேட்டாள்.

‘என்னது கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்தார்களா?'

‘ஆமாம்'என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்தாள் சாலிஹா.

‘பில்கீஸ்பானு ரான்திக்பூர் கிராமத்தில் வாழ்ந்து வந்த தன்னுடைய பெற்றோரைச் சந்திக்க வந்திருந்தார்.இந்தக் கிராமம் கோத் ராவுக்குப் பக்கத்தில் இருந்தது.பில்கீஸ் 3 வயது குழந்தைக்குத் தாயாகவும்,5 மாத கர்ப்பத்தைச் சுமந்தவராகவும் இருந்தார்.சமையலறையில் மதிய உணவை சமைத்துக் கொண்டிருந்த பில்கீஸை அவளுடைய அத்தையும் அவருடைய குழந்தைகளும் ஓடி வந்து,மற்ற முஸ்லிம்கள் வீடுகளும்,தங்களுடைய வீடும் தீ வைத்துக் கொளுத்தப்படுவதாகவும்,உடனடியாக இந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றும் கூறினார்கள்.

தன்னுடைய மூன்று வயது மகள்,தன் தாய்,கர்ப்பிணியான உறவுப்பெண்,அவளுடைய உடன்பிறப்பு,அவருடைய மகன்கள்,மகள்கள் வயது வந்த ஆண்கள் இருவர் என மொத்தம் 17 பேர் குழுவில் பில்கீஸ் பானுவும் இருந்தார்.பாதுகாப்புக் கோரி கிராம கவுன்சில் தலைவரிடம் சென்றுள்ளனர்.ஆனால் முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுத்தால் அவரையும் கொலை செய்துவிடுவதாக அந்தக் கும்பல் மிரட்டியதால் அந்த இடத்தை விட்டுச் சென்றனர்.

மார்ச் மாதம் 3ஆம் தேதி அங்கு வந்து சேர்ந்த கொடூரர்கள் அவர்களை வாளாலும்,தடியாலும் தாக்கினார்கள்.3 வயது மகள் மதவெறியர்களால் கல்லால் அடித்துக் கொல்லப்பட்டாள்.அவளுடைய ஆடைகளைக் கிழித்தெறிந்தனர்.அதன் பிறகு அந்தக் கொலைவெறிக் கும்பலால் கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டாள்.

பில்கிஸ் பானுவை வன்புணர்ந்தோரும் அந்தக் குழுவில் இருந்தோரைத் தாக்கியோரும்,சிறு வயதில் அவர்களோடு பார்த்துப் பார்த்து வளர்ந்த கிராமத்திலுள்ள அண்டை வீட்டுக்காரர்கள்தான்.தான் ஐந்து மாத கர்ப்பிணி என்றும் இரக்கம் காட்டு மாறும் பில்கீஸ் பானு அவர்களிடம் மன்றாடியும் அவர்கள் கேட்கவில்லை.அவர்களுடன் வந்த பெண் இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் குழந்தை பெற்றிருந்தார்.அவரையும் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கிக் கொன்றார்கள்.இரண்டு நாள் பச்சிளம் குழந்தையும் கொல்லப்பட்டது.அவள் குடும்ப உறுப்பினர்கள் 14 பேரும் அவள் கண் முன்னால் கொலை செய்யப்பட்டார்கள்.

பில்கிஸ் பானு சுயநினைவிழந்து போனதால் இறந்துவிட்டதாக நினைத்து வன்னெஞ்சர்கள் விட்டுப் போயினர்.எனவே அவர் பிழைத்துக்கொண்டார்.ஏழு வயதும்,நான்கு வயதுமான இரு சிறுவர்கள் மட்டும் இந்தப்படுகொலையில் இருந்து தப்பித்தவர்கள்'

சொல்லச் சொல்ல கட்டுப்படுத்த முடியாமல் அழுகை பொங்கி பிரவாகமெடுத்தது சாலிஹாவிற்கு.

கேட்டுக் கொண்டிருந்த ஹஸினாவும்,சாதிக்காவும் முகத்தை மூடி அழுதனர்.கொழுக்கட்டை குழம்பின் வாசனை வீட்டை நிறைத்தது.கொதிக்கும் உருண்டைகளுக்கு அருகில் பிடித்து வைத்த மற்ற உருண்டைகளைக் குழம்பில் போடுமாறு ஏவினாள் சாலிஹா.

‘சொல்லுங்க மாமி பில்கீஸ் பானு என்ன ஆனா?'என்று கேட்டாள் சாதிக்கா

‘இந்தக் கொடூரத்திலிருந்து தப்பித்த பில்கீஸ் இதை இப்படியே விட்டு விட வில்லை.பல ஆண்டுகளாக நீதி கேட்டுப் போராடி வருகிறாள்.முதன் முதலில் அவள் கேஸ் போட்ட போது அவர்களே அதைத் திரும்ப வாங்கும்படி மிரட்டினார்கள்.தொடர்ந்து பில்கீஸ் போராடினாள்.இந்த வழக்கு குஜராத்திலிருந்து மஹாராஷ்டிரா நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.வழக்கு விசாரணைக்கு வந்தபோது பல சிக்கலுக்கு ஆளானார்கள்.இறுதியாக பில்கீஸ் வென்றாள்.அநியக்காரர்கள் அனைவருக்கும் மரண
தண்டனை அளிக்குமாறு வாதாடினாள்.ஆனால் குற்றவாளிகளுக்கு ஆயுள்தண்டனைதான் கிடைத்தது'

‘அல்லாஹ்வே! நெஞ்செல்லாம் படபடங்குதே!'ஹஸினா அழும் குரலில் கூறினாள்.

‘இது ஒரு நிகழ்வு மட்டுமல்ல..இதுபோன்று பல பெண்கள் வன்புணர்வு செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார்கள்.வேதனையோடும்,அவமானத்தோடும் அந்தப் பெண் பிள்ளைகளின் தந்தைகள்,தங்கள் மகள்கள் வன்புணர்வுக்கு ஆளானதைப் பத்தி வாக்குமூலம் கொடுத்தார்கள்.ஸுஃபியாபானு என்ற 22 வயதுப் பெண்,அவள் தந்தை கண்ணெதிரில் வன்புணர்வுக்கு ஆளாகி தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்டாள்.

அவருடைய தந்தை தன் மகளைக் காப்பாற்ற முயற்சி செய்திருக்கிறார்.அவரை இறுக்கமாகப் பிடித்துக் கொண்ட கயவர்கள்,அவருடைய தாடியை வெட்டி வீசியுள்ளார்கள். அவரது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொல்லப்பட்டார்கள்.

‘அக்கா!நீங்க சும்மா இருக்க மாட்டீங்களா?ஒன்னுஒன்னா கேக்குறீங்களே!எனக்கு என்னவோ பண்ணுது' ஹஸினா பதறினாள்.

‘மாமி! போலீஸோ,கவர்மெண்டோ ஏதும் செய்யலியா? அவர்கள் போலீஸ் ஸ்டேசன் போயிருக்கலாமே?'என்றாள் சாதிக்கா.

‘போமா நீ வேற!திட்டமிட்டு செஞ்சதே அரசாங்கம்தான்.நரோடா பாட்டியா போன்ற பகுதியில் திட்டமிட்டு,வெட்டப்பட்டு,குத்தப்பட்டு,வன்புணர்வு செய்யப்பட்டு 150 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள்.அரசு எத்தனை பேர் இறந்தார்கள் என்று கணக்கெடுக்கவில்லை என்பதுதான் இங்கு அதிர்ச்சியான தகவல்.

துப்பாக்கிச்சூடோ,பயங்கர வெடிகுண்டுகளோ உபயோகிக்கவில்லை.வாள்கள்,இரும்புக் கம்பிகள்,திரிசூலங்கள்,கூர்மையான கத்திகள் இவற்றைத்தான் பயன்படுத்தியுள்ளார்கள்.காவல்துறை ஆய்வாளர் கே.கே மைசூர் வாலாவிடமும்,மற்ற காவல் துறையினரிடமும் உயிர் காக்கும்படி,உதவும்படி கெஞ்சியுள்ளார்கள்.‘இன்று உங்களைக் காப்பாற்ற எங்களுக்கு உத்தரவு இல்லை' என்று அவர்கள் பதிலளித்துள்ளார்கள்.சில எஸ்.ஆர்.பி.காவலர்கள் பாதிக்கப்பட்டவர்களை நோக்கி ‘உங்களுக்கு அடைக்கலம் தர மாட்டோம்.இன்று நீங்கள் சாக வேண்டிதுதான்' என்று எகத்தாளமாகச் சொல்லியுள்ளார்கள்.

‘அந்த நகரில் இதர மதக் குடும்பங்கள் இல்லையா? அவங்களுக்கும் இந்த கதி தானா?'

‘இது நடந்தது முஸ்லிம்களுக்கு மட்டும் தான்.இந்துக்கள் குடும்பங்கள் தாக்குதல் நடக்கும்னு தெரிஞ்சி முதல் நாள் இரவே வெளியேறிவிட்டார்கள்.கலவரக் காரர்களை வழி நடத்தியதே மேலவை உறுப்பினர்களான அரசியல்வாதிகள் தான்'

வெளியில் சென்றிருந்த ஆண்கள் வந்து சாப்பிட உட்காந்தார்கள்.சாதிக்கா கண்களைத் துடைத்துக்கொண்டு ‘சுப்ரா' விரித்தாள்.

சாலிஹா ஐந்தாறு தட்டுகளில் தக்கடிக் குழம்போடு எடுத்துக் கொடுக்க ஹஸினா கொண்டுபோய் வைத்தாள்.தண்ணீர்,எச்சில் பிளேட் வைத்தார்கள்.பெரிய பேசின் பாத்திரத்தில் சாப்பிட எடுத்துக் கொண்டு வந்தமர்ந்தாள்.

ஆமினாக்கா நறுக்கிய பப்பாளிப் பழத் துண்டுகளை கண்ணாடிக் கோப்பையில் கொண்டு வைத்தாள்.சாப்பிட ஆரம்பித்தார்கள்.அங்கே கனத்த மௌனம் நிலவியது.

(தொடரும்)


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர தொடர்

மேலும் தேடல்