இரவு உணவு முடித்து அனைவரும் ஒன்றாக அமர்ந்தனர். இரண்டாம் மகன் சுல்தானும், சின்னவன் தஸ்தகீரும் இரண்டு பக்கமும் உட்கார்ந்திருந்தார்கள்.
‘என்னப்பா! பாடிகார்டு மாதிரி சாச்சியின் இரண்டு பக்கமும்?’
சுல்தான் ஆரம்பித்தான், ‘பெரிய மகன் வீட்டுக்கு போய் வந்தீங்களே? என்ன சொன்னாரு?’
ஆமினாக்கா நொடித்தாள். ‘சாலிஹா இவனாலதான் தினமும் பஞ்சாயத்து. ஒரே அவனப் பத்தியே பேசுறது. வம்பிழுக்குறது’
‘ஏம்பா! அம்மா பாவமில்லையா? போனதே ஒரு கவலை. நாங்க இருக்கோமா, கவலப்படாதீங்கன்னு சொல்லுறதை விட்டு, இப்படிப் பேசினா வேதனைப்பட மாட்டாங்களா?’
‘அவரைத்தானே எம்புள்ள, பெரிய புள்ளன்னு தூக்கிப் பேசுவாங்க’
‘உனக்குப் பின்னால் உன்னை உசத்திப் பேசுவாங்க.!’
‘நானும் சொல்லுவேன் மாமி. அப்படியெல்லாம் பேசாதீங்க பெரியவங்கன்னு! கேட்டாத்தானே’ என்றாள் சாதிக்கா.
‘வந்த புள்ளக்கி இருக்குற அக்கறை இருந்தவங்களுக்கு இல்லையே?’
‘இவங்களையும் பத்து மாசம்தான் சுமந்தேன். இவங்களுக்கும் அவனைப் போலத்தான் பால் கொடுத்து வளத்தேன். ஆனால் அவன் இப்படியெல்லாம் பேச மாட்டான்’
‘பாத்தீங்களா சாச்சி. அண்ணனை ஒசத்திட்டாங்க. விட்டுப் போனவன் நல்லவன். நாங்க பேசுறவங்க!’
‘தஸ்தகீர்! உன் பங்குக்கு ஏதும் சொல்றியா?’
சாலிஹா கிண்டலாகக் கேட்டாள்.
‘நா வரல சாச்சி இந்த விளையாட்டுக்கு! இவன் இப்படித்தான் பேசுவான். ஆனா அம்மாக்கு ஒன்னுன்னா துடிச்சிருவான்’
‘உங்க பஞ்சாயத்தை நிறுத்துங்கப்பா. வேற பேசுங்க. நா நாளக்கி வீட்டுக்குப் போயிருவேன்’.
‘ஏன் சாச்சி இப்போ காட்டுலயா இருக்கீங்க?’
‘வந்து மூனு நாளாச்சிப்பா! உம்மா வீட்டுக்கு வந்துட்டு ஊரச் சுத்துறேன். நா வந்தது என் மச்சிக்கும் அவங்க மக்களுக்கும் தெரியாது. தெரிஞ்சா மதுரைக்கே வந்துருவாங்க! அங்கேயும் போக வேண்டாமா?’
‘சாச்சிமா! இங்கேயே இருந்துருங்களேன். ஹஸினா உங்கட்டே நிறைய கத்துக்குவா. அம்மாக்கும் துணையா இருக்கும்’ என்றான் தஸ்தகீர்.
அவனை வியப்பாகப் பார்த்தாள் சாலிஹா. ஊமையா இருக்கும் தஸ்தகீரா இப்படிப் பேசுறான்?’
‘மகனே! ஒரு வீட்டுல ஒரு மாமியார் தான் இருக்கணும். ரெண்டு டிரைவர் வண்டி ஓட்டினா அபாயமப்பா!’
செல்போன் அலறியது. எடுத்துப் பார்த்தாள். முபீன் அழைத்தாள். எடுத்ததும் முபீன் கேவினாள். ‘ஏய் ஏன் அழுறே! ராத்திரி நேரம். பகலில் பக்கம் பார்த்துப் பேசு. ராவில் அதையும் பேசாதேன்னு பழமொழி சொல்லுவாங்க’
‘ஆண்ட்டி.. சீக்கிரம் வந்துருங்க! எனக்கு இங்க வீட்டுல இருக்கவே புடிக்கல!’
‘நா வந்து ஒரு மாசம் கூட ஆகல. நீ இதுவரை அஞ்சாறு முறை போன் போட்டுட்டே. நா நிம்மதியா இருக்க வேணாமடி?’
‘இல்ல ஆண்ட்டி. உங்களோடு பல ஆண்டுகளா சேர்ந்து இருந்துட்டேனா தேடுது ஆண்ட்டி’
‘நான் வர்றதுக்கு முன்னால அவங்களோட தானே இருந்தே. நான் வராம இங்கேயே இருந்துட்டா என்ன செய்வே?’ அந்தப் பக்கம் பதிலையே காணோம். மெதுவான விசும்பல் சத்தம் மட்டும் கேட்டது.
‘சரி முபீன்! நான் நாளை வீட்டுக்குப் போய் பேசுறேன். இப்போ அக்கா வீட்ல இருக்கேன்’ செல்போனை அணைத்தாள்.
‘என்ன சாச்சி! மெட்ராஸ்ஆஃபீசிலிருந்து கூப்பிடுறாங்களா?’ என்றான் சுல்தான்.
‘போப்பா! உனக்குக் கிண்டலும், கேலியுமா இருக்கு..’
‘சாச்சி! இப்பல்லாம் வேலை கிடைக்கறது குதிரைக் கொம்பா இருக்குது. அதுவும் ஆண்கள் இல்லாம பெண்கள் மட்டும் புர்காவோடு வேலை செய்ற இடம் கிடைக்கறது அபூர்வம். வேலை செய்யும் இடத்தில் தொழக்கூட நேரமில்லாமல் இருக்காங்க. கிடச்ச வேலையை விட்டுறாதீங்க’ என்றான் தஸ்தகீர்
‘மொத்தத்தில் துரத்துறீங்க!’
‘சேச்சே! அப்படி இல்லை சாச்சிமா! வேல பாத்து பழகிட்டா எங்கேயும் இருப்பது கஷ்டம். உங்களுக்கு முடியும் வரை இருங்க. அப்புறம் நாங்க இருக்கோம். கவலையே படாதீங்க. நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து பெண்கள் மதரஸா ஆரம்பிக்கலாம்னு பேசிக்கிட்டிருக்கோம். இடம் அமைஞ்சா ஆரம்பிச்சடலாம்’
‘பரவாயில்லையே! திட்டங்கள் நல்லாருக்கே தஸ்தகீர்’
‘அதுமட்டுமில்லை சாச்சி! அந்த மதரஸாவுக்கு ‘மதரஸத்துஸ் ஸாலிஹா’ என்று உங்க பெயரை வைத்து, அங்கே உங்களத் தான் தலைமையாப் போடப் போறோம்’.
தஸ்தகீரின் வார்த்தைகளைக் கேட்டவுடன் சாலிஹாவின் கண்கள் கலங்கியது. கன்னங்களில் கண்ணீர் உருண்டது.
‘ஏன் சாச்சி! சத்தாரண்ணனை மட்டுமா வளத்தீங்க? எங்களையும் தான் வளத்தீங்க? என்னவெல்லாம் வாங்கிக் கொடுத்தீங்க?. இப்போ மெட்ராசிலிருந்து எங்களுக்கும், எங்க பிள்ளைகளுக்கும் எவ்வளவு வாங்கி வந்திருக்கீங்க? நாங்க உங்களுக்குப் பார்க்காம யாருக்குப் பார்ப்போம்..’
‘போதும்ப்பா! நீங்க பாக்குறீங்களோ இல்லியோ என் மனம் நிறைஞ்சிருச்சி. பிள்ளை இல்லை என்ற கவலையெல்லாம் போயிருச்சி’ முகத்தை மூடிக்கொண்டு அழுதாள் சாலிஹா.
ஆமினாக்காவின் இரண்டு மருமகள்களும் சாலிஹாவின் முதுகுப்புறமாக வந்து அமர்ந்தார்கள். ‘எங்களையும் உங்க மகள்களாக நெனச்சுக்கங்க மாமி. நாங்க இனி உங்களை மாமின்னு சொல்லாம மம்மீன்னே சொல்லு றோம்’ சாதிக்கா சொல்லவும் இரு மகன்களும், ஆமினாவும் சிரித்தார்கள்.
‘சரி சரி எல்லோரும் போய் படுக்கப் போங்க. நேரம் போகுது’
‘மாமி! குஜராத் பிள்ளைங்களைப் பற்றிச் சொல்லுறேன்னீங்க!’ ஹஸினா ஆவலுடன் கேட்டாள்.
‘நாளைக்குச் சொல்றேன் ஹஸினாம்மா.. போய்ப்படுங்க!’
இரவு ஆமினாக்காவின் அருகில் படுத்திருந்த சாலிஹா, ‘அக்கா உன் பிள்ளைகள் நல்ல பிள்ளைகள். மருமகள்களுக்குச் சொல்றது போல் சொல்லிக் கொடுங்க. பக்கென்று பிடித்துக் கொள்வார்கள். நீங்க வீணா கவலைப் படாதீங்க. உங்களை நல்லாப் பாப்பாங்க..’
‘தெரியும் சாலிஹா. ஆனாலும் வாயடிக்கும் போது, பேச வேண்டியதா இருக்கு’
‘அவங்களுக்கு அக்கா, தங்கச்சிங்க கிடையாது. மச்சானுக்கும் அக்கா தங்கச்சிங்க கிடையாது. நீங்க தான் அக்கா, அம்மா எல்லாம். வீட்டுக்குப் பெண் பிள்ளைங்க யாரும் வந்து போனா அவங்க பேச, புரிய, கவலைப்பட எதுவும் இருக்கும்.’
‘நானே ராஜா, நானே மந்திரின்னு இருக்காங்க. அப்டித்தான் இருக்கும். அவங்க பிள்ளைகள் வளர, வளரச் சரியாயிடுவாங்க!’
‘நீ இங்கேயே மதுரைக்கு வந்துடேன் சாலிஹா’
‘பார்ப்போம். இன்னும் நாளிருக்கு. முடிவெடுப்போம். இப்போ படுப்போம்’
தொடரும்