
சாலிஹா வீட்டுக்குப் புறப்பட்டாள்.ஆமினா அக்கா ஒரு தூக்கு வாளியில் தக்கடியைப் போட்டு,அம்மாவுக்கும் ரசிதாவுக்கும் கொடுத்தனுப்பினாள்.பெரியவன் ஆட்டோ பிடித்து வந்தான்.தானும் உடன் வந்து விட்டு வருவதாகக் கூறி ஆமினாக்காவும் புறப்பட்டாள்.
‘சாச்சி!நா வண்டியில வரும்போது அம்மாவைக் கூட்டி வந்து விடுகிறேன்' என்று அவர்களுடன் ஆமினாக்காவின் சின்ன மகனும் புறப்பட்டான்.வீடு வந்து நுழைந்தவுடன், கட்டிப்பிடித்து கன்னத்திலும் நெற்றியிலும் முத்தமழை பொழிந்தாள் சாலிஹாவின் சித்தி.தாயின் உடன் பிறந்தவர்களைச் சாச்சி,பெரியம்மா என்று அழைப்பார்கள்.
பீவியம்மாவிற்கு ஒரே தங்கை.பெயர் சித்தி மிஸ்ரியா.பீவியம்மா தங்கையை சித்திமா என்று அழைப்பதைப் பார்த்து எல்லோரும் சித்திமா என்றே அழைத்தார்கள்.
‘சித்திமா நல்லா இருக்கீங்களா?'
‘நா நல்லாருக்கேமா!நீங்களெல்லாம் சொகமா இருக்கீங்களா?ஆமினா ரொம்ப இளைச்சுப் போயிட்டியே!மருமகன் போனாலும் போனாரு உன் சதையையும் வாங்கிட்டுப் போயிட்டாரு'
சிறிது நேரம் பேசிவிட்டு ஆமினா புறப்பட்டுச் சென்றாள்.அம்மாவிடமும் வழி சொன்னாள்.
‘இருந்து போயேன் ஆமினா.சித்திமா வராதவ வந்து இருக்கா' பீவியம்மா மகளிடம் கூறினாள்.
‘அடுத்த வாரம் வர்றேம்மா! வீட்ல எல்லாம் அப்படி அப்படியே போட்டுட்டு வந்து இருக்கேன்.ரெண்டு மருமகளும் வந்திருக்காங்க.பிள்ளைங்க பாடா படுத்துவாங்க..வாரேன்..' என்று கூறி புறப்பட்டுவிட்டாள்.
‘பேரப்பிள்ளை எப்படி இருக்கீங்க?' ஆமினாவின் மகனைப் பார்த்து சித்திமா கேட்டாள்.அவன் பாட்டிக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கையைப் பிடித்து சொடக்கு விட்டுக் கொண்டிருந்தான்.
‘நல்லா இருக்கேன் கண்ணும்மா. நீங்க வாங்க வீட்டுக்கு'
‘வரேன்ம்பா! எங்க போக முடியுது? யாராவது கூட்டிப் போனால் தான் உண்டு.வயசாயிருச்சுல தனியா வர்றது கஷ்டம் தான்பா'
பாட்டியை பெரும்பாலும் கண்ணம்மா! அல்லது கண்ணா! என்றே அழைப்பார்கள்.
‘சித்திமா என்ன சாப்பிட்டீங்க? கொஞ்சம் தக்கடி சாப்பிடுங்களேன்' சாலிஹா தட்டில் எடுத்து வைத்துக் கொடுத்தாள்.
‘ரசிதா நீயும் சாப்பிடு! தம்பி மனைவியிடம் கூறினாள்.‘அம்மா சாப்பிடுறீங்களா?' பீவி அம்மாவைக் கேட்டாள்.
‘காலையிலேயே ஓட்ஸ் கஞ்சி போட்டு கொடுத்துட்டாமா.இதெல்லாம் இப்ப சாப்பிட முடியாது.செமிக்காது'
‘எவ்வளவு நாள் ஆகிவிட்டதுதக்கடி சாப்பிட்டு.நல்ல ருசியாகச் சமைத்து இருக்கிறாள் ஆமினா.ரசித்துச் சாப்பிட்டாள் சித்திமா'
‘ஆமினாக்கு தக்கடி போட வராது!சாலிஹாதான் போட்டிருப்பா! நீ தானே போட்டே!'
‘ஆமாம்மா'
சாப்பிட்டு முடித்த பாத்திரங்களை உள்ளே கொண்டு சென்றாள் ரசிதா.
‘சித்திமா மருமகள்கள்,பேரன்,பேத்திகள் எல்லாம் எப்படி இருக்கிறார்கள்?' என்றாள் சாலிஹா.
‘அவங்களுக்கு என்னம்மா உங்க உங்க சோறு! ஒழக்கு ஒழக்கு நெய்யின்னு நல்லாத்தான் கழிக்கிறார்கள்.நாந்தான் உத்த செய்தி சொல்ல ஆளில்லாமல் நெஞ்சிலே வச்சி மாஞ்சி கிடக்கேன்'
‘சாலிஹா! இப்பதான் உன் முகம் நல்லா இருக்குதும்மா! சல்மான் போன பிறகு வாடி,வசங்கி போயிருந்த.என் வீட்டுக்கு வரவேண்டியவ எங்கேயோ போயிட்டேமா'
ஆரம்பத்திலேயே தன் மகனுக்கு சாலிஹாவைக் கேட்டாள் சித்திமா.பீவி அம்மா ஒரே வார்த்தைக் கூறிவிட்டாள்.
‘நாம இப்படியே இருப்போம்.அக்கா தங்கை உறவாகவே இருக்கட்டும்.சம்பந்தி என்ற உறவு வந்து நமக்குள் பிரிவினை வர வேண்டாம்'
ஆமினாவின் மாப்பிள்ளை வேறு குதித்தார்,‘அக்கா தங்கைக்குள் சம்பந்தமா அது நல்லாவா இருக்கு?'
பீவியம்மா மருமகனுக்குப் பதில் கூறினாள்.‘இஸ்லாத்தில் அப்படி அக்கா தங்கச்சி சம்பந்தம் கலக்கலாம் வாப்பா'
‘அதெல்லாம் ரத்த உறவு இல்லையா என்ன இப்படி அசிங்கமா பேசுறீங்க! சின்னம்மா மகன் அண்ணன் அல்லவா?' என்றார்.
‘இதெல்லாம் ரத்த உறவு இல்லை வாப்பா! இஸ்லாம் இதற்குத் தடை சொல்லல.கூடப் பிறந்தால்தான் ரத்த உறவு.பெண் பிள்ளைகள் தாய் மாமனைக் கட்டிக் கொள்ளக் கூடாது.சித்தப்பா பெரியப்பாவைக் கட்டிக் கொள்ளக்கூடாது.ஆம்பிள்ளைகள் சின்னம்மா பெரியம்மாவைத் திருமணம் முடிக்கக்கூடாது.அதுபோல தகப்பனோடு பிறந்த அத்தையைக் கட்டிக் கொள்ளக் கூடாது.இது தான் முதல் முக்கிய ரத்த உறவு'
‘நான் அந்தக் காரணத்திற்காக வேண்டாம்னு சொல்லலை.எனக்கு இருப்பதோ ஒரே ஒரு தங்கச்சி.நாளைக்கு ஏதாவது வம்பு தும்பு வரக்கூடாது என்று தான் வேண்டாம் என்று சொல்றேன்' ஆனாலும் சித்திமாவுக்கு சாலிஹா மேல் ஒரு கண்.தன் வீட்டிற்கு அவளை மருமகள் ஆக்கிக்கொள்ள வேண்டும் என்று படாத பாடு பட்டாள்.ஆனால் விதி வேறாக இருந்தது.நேரம் கிடைக்கும்போதெல்லாம் அதைப் பற்றிச் சொல்லிக் கொண்டே இருப்பாள்.தன் மகன் பிள்ளைகளைக் காட்டி,‘உன் வயிற்றில் பிறக்க வேண்டிய குழந்தைகள்' என்று கூறுவாள்.
‘சித்திமா யார் யார் விதி எங்கெங்கோ.இனிமே அதைப்பற்றி சொல்லாதீங்க.நான் அவங்களையெல்லாம் பாக்கும்போது மனசு கஷ்டமா இருக்குது' என்று எத்தனையோ முறை சொல்லிப் பார்த்தாள் சாலிஹா.
ஆனாலும் சித்திமாவுக்கு சாலிஹாவைப் பார்க்கும் போதெல்லாம் என்னை விட்டு வேறு வீட்டு மருமகளா போய் விட்டாயே?என்று சொல்வது வாடிக்கையான விஷயம் ஆகிவிட்டது.சின்ன வயதிலே சாலிஹாவை சித்திமா,தன் வீட்டுக்கு அடிக்கடி கூட்டிப் போவாள்.பெண் குழந்தைகள் இல்லாததால் சிறு சிறு வேலைகளை வாங்குவாள்.சின்ன வயதிலேயே சாலிஹா கருத்தாக வேலை செய்வது,சொன்ன வேலை மட்டுமல்லாமல் சொல்லாத வேலைகளையும் செய்வது,எல்லோருக்கும் பிடித்துப் போன ஒன்று.
அதுமட்டுமல்லாமல் தமிழில் படிப்பது,எதையாவது எழுதுவது,திருக்குர்ஆன் ஓதுவது,இதெல்லாம் பார்ப்பவர்களைப் பரவசப்படுத்துதாக இருந்தது.
திருமணமான புதிதில் சாலிஹாவுக்கும் சல்மானுக்கும் விருந்து வைத்தாள்.பீவியம்மாவோடு புதுமணத் தம்பதிகள் விருந்துக்குச் சென்றார்கள்.நன்றாகத்தான் எல்லாம் நடந்தது. வீட்டிற்குப் புறப்படும் நேரத்தில் ஒரு குண்டைத் தூக்கி போட்டாள் சித்திமா.
‘நாங்க எங்க புள்ளைக்கு எடுக்க நினைச்சோம்.நீ..எங்க சாலிஹாவைக் கொத்திக் கொண்டு போய்விட்டாயப்பா?'என்றாள்.
பீவி அம்மாவுக்குக் கோபம் வந்து விட்டது.‘என்ன துப்புக்கெட்ட மாதிரி பேசுற' என்று அதட்டினாள்.
‘மருமகனே தப்பா நினைக்காதீங்க..! எங்க சாலி எல்லாத்துலயும் பஸ்ட்ஆக்கும்.எந்த வேலையும் செய்வா.வீட்டு வேலை செய்வா.எழுதுவா,படிப்பா,பாடுவா பொதுவா எல்லா வேலையும் செய்வா.எங்களுக்குக் கொடுத்து வைக்கல அந்த ஆதங்கத்தில் தான் சொல்றேன்.நீங்க தப்பா நினைக்காதீங்க!'
பீவி அம்மா இன்னும் இரண்டு அதட்டு அதட்டினாள்.‘வாயை மூடு! தெரியாத அறியாத பிள்ளைகள் மனசுல ஒண்ணு கிடக்க ஒண்ணு சொல்லிக்கொடுத்து மனசுல விஷத்தை வெதச்சிடாதே'
வீடு திரும்பும்போது சல்மானின் முகத்தில் ஈயாடவில்லை.அன்றிரவு சாலிஹாவிடம் கேட்டான்.‘சாலிஹா! இந்தக் கல்யாணத்தில் உனக்கு விருப்பம் இல்லையா?'
(தொடரும்)