மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

நட்சத்திர முற்றம்

பசித்திரு
-அஷ்ஷெய்க் A.C.அகார் முஹம்மது, Feb 16-28


ரமளான் ‘தஸ்கியத்துன் நப்ஸ்' எனும் உளத்தூய்மையை இலக்காகக் கொண்ட மாதம்;ஆன்மாவைப் பரிசுத்தப்படுத்தி,உரமூட்டி வளர்க்கத் துணை புரியும் மாதம். ஆன்மாவைத் தூய்மைப்படுத்தி மேம்படுத்த பல வழிகள் உண்டு.அவற்றை நிறைவாகக் கடைப்பிடிக்கும் சந்தர்ப்பத்தை ரமளான் நமக்குத் தருகின்றது.அவற்றில் முதன்மையானது பசித்திருத்தலாகும்.

ரமளானில் பகல் பொழுது முழுவதும் பசித்திருக்கின்றோம்.உணவுக் கட்டுப்பாடு என்பது உடல் ஆரோக்கியத்திற்கும் ஆன்மாவின் ஆரோக்கியத்திற்கும் இன்றியமையாதது என்ற உண்மையை ஏற்றுக் கொள்ளாதோர் எவரும் இல்லை.

குறிப்பாக ஆன்மாவின் மேம்பாட்டுக்கும் உணவுக் கட்டுப்பாட்டிற்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது.உண்மையான இறையடியார்கள் பசி இல்லாமல் சாப்பிடுவதில்லை.சாப்பிடும் போதும் வயிறு நிறைய சாப்பிடுவதில்லை.

‘உண்ணுங்கள்,பருகுங்கள்;விரயம் செய்யாதீர்கள்.ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து விரயம் செய்வோரை விரும்புவதில்லை (திருக்குர்ஆன்7:31) என்பது அல்லாஹ்வின் கட்டளை.இங்கு விரயம் செய்தல் என்பது மிதமிஞ்சி,வயிறு புடைக்க உணவு உட்கொள்வதையும் குறிக்கும்.

‘ஒருவர் தனது முதுகெலும்பை நிமிர்த்தி நிற்கும் அளவுக்குச் சில உணவுக் கவளங்களை உட்கொண்டாலே போதுமானதாகும்.அவர் சாப்பிடுவதாக இருந்தால் ஒரு பகுதியை உணவுக்கும் மற்றொரு பகுதியை தண்ணீருக்கும் எஞ்சிய மூன்றாம் பகுதியை மூச்சுக்கும் விட்டு விடட்டும்' என்பது நபியவர்களின் வழிகாட்டல்.

உணவுக் கட்டுப்பாட்டை பேணாமல் வயிறு நிறையச் சாப்பிடுவதனால் ஆன்மாவுக்கு ஏற்படும் ஆபத்துகளை நமது தொடக்க கால அறிஞர்கள் அற்புதமாக விளக்கி இருக்கின்றார்கள்.‘மிதமிஞ்சிய உணவு வணக்க வழிபாடுகளின் சுவையைக் கெடுத்து விடும்;அறிவுத் தேடலைப் பாதிக்கும்;உள்ளத்தில் இரக்க சுபாவத்தை போக்கிவிடும்; வணக்க வழிபாடுகளைச் சுமையாக மாற்றும்;ஆசாபாசங்களைத் தீவிரமடையச் செய்யும்'என்று எச்சரிக்கிறார் அபூ சுலைமான் அத்தாரானி(ரஹ்) அவர்கள்.

இமாம் ஷாபிஈ(ரஹ்) அவர்கள் கூறுகிறார்:‘நான் பதினான்கு ஆண்டுகளாக வயிறு நிறையச் சாப்பிட்டதே இல்லை.ஏனெனில் வயிறு நிறையச் சாப்பிடுவதனால் உடல் ஒரு சுமையாக மாறுகின்றது;உள்ளம் மென்மையை இழந்து,வன்மை அடைகின்றது;புத்தி கெட்டுப் போகின்றது;தூக்கம் மிகைக்கின்றது'

வாயைக் கட்டுப்படுத்தி உணவு உட்கொள்வதைக் குறைப்பதனால் விளையும் நன்மைகள் பல.ஒருவர் உணவு உட்கொள்வதைக் குறைத்தால் உள்ளம் தெளிவடையும்.அது எப்போதும் விழிப்பு நிலையில் இருக்கும்.அது மென்மையடையும்;கர்வம் குறையும்;பாவங்கள் மீதான மோகம் இல்லாமல் போகும்;உள்ளத்தின் ஆசாபாசங்களை அடக்கியாளும் வல்லமை உருவாகும்;தூக்கம் குறையும்; சுறுசுறுப்பாக இயங்கும் நிலை தோன்றும்;வணக்க வழிபாடுகளில் ஆர்வம் மிகைக்கும்.

எனவே,ஏக காலத்தில் உடல் ஆரோக்கியத்திற்கும்,ஆன்மாவின் மேம்பாட்டிற்கும் பெரும் துணையாக அமைகின்ற உணவுக் கட்டுப்பாட்டைப் பேணுவதற்கும் அதற்கான பயிற்சியைப் பெற்றுக் கொள்வதற்குமான அற்புதமான சந்தர்ப்பத்தை ரமளான் நமக்குத் தருகின்றது.

ஆயினும் இஃப்தார் வேளையிலும் சஹரின் போதும் மிதமிஞ்சி,வயிறு புடைக்கச் சாப்பிடுகின்ற போது பகல் பொழுதில் பசித்திருந்து பெற்ற பலன்களையும் நன்மைகளையும் இழந்து விடுவோம் என்ற உண்மையை மனதில் கொண்டு நாம் செயல்பட வேண்டும்.

இங்கே ஓர் உண்மையை அழுத்தமாகப் பதிவு செய்ய வேண்டும்.நோன்பு நோற்பதால் உலக வாழ்வில் பல பயன்கள் கிடைக்கின்றன என்பது உண்மையாயினும் நாம் நோன்பு நோற்பது அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்ற வேண்டும்;அதன் மூலம் அவனது திருப்தியைப் பெற வேண்டும் என்பதற்காகவே என்ற உண்மையை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

வாயைக் கட்டுப்படுத்தினால் நோயைக் கட்டுப்படுத்தலாம்.அது உடல் நோயாக இருக்கலாம்; உள நோயாக இருக்கலாம்;ஆன்மா சார்ந்த நோயாக இருக்கலாம். அனைத்தையும் கட்டுப்படுத்த உணவுக் கட்டுப்பாடு உதவும் என்ற பேருண்மையைப் புரிந்து செயல்பட வேண்டும்.ரமளான் காலம் நாம் அர்த்தமுள்ள வகையில் பசித்திருந்து, ஆரோக்கியம் பேணிய காலமாக அமையட்டும்; இக்காலத்தில் பெற்றுக் கொண்ட பயிற்சி ரமளானுக்குப் பிறகும் நமக்குப் பயனளிக்கட்டும்!


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர தொடர்

மேலும் தேடல்