ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்திய அளவில் நடத்திய அண்டை வீட்டார் உரிமைகள் பரப்புரையை 22.10.2025இல் தொடங்கி வைத்து ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்தியத் தலைவர் சையத் சஆதத்துல்லாஹ் ஹுசைனி ஆற்றிய உரை இந்த இதழின் மேடையை அலங்கரிக்கின்றது.
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அண்டை வீட்டார் உரிமைகள் என்ற மிக முக்கியமான கருப்பொருளில் அனைத்திந்திய பரப்புரையை நடத்தியது. சில நல்லொழுக்க போதனைகளை, நற்போதனைகளைப் பேசுவதற்கான பரப்புரை அல்ல. ஒரு பரிசுத்தமான இஸ்லாமிய சமுதாயத்தின் அடிப்படைகளை நிலை நிறுவுவதற்கான பரப்புரையாகும்.
நாம் வாழ்கிற இந்தக் காலகட்டம் சுயநலம், எல்லாம் தனக்கு மட்டுமே என்ற Selfishness காலகட்டம் எனப்படுகிறது. நவீன மேற்கத்திய தத்துவங்கள் அகில உலகில் சுயநலத்தைப் பரப்பி வருகிறது.
தனித்துவம் (Individualism) என்ற பெயரில் தனியாக இருப்பது சுயநலம் என்பதின் மறுபெயராகும். என் வீடு, என் வேலை, என் மனைவி, என் மக்கள், என் உடல் என்பது மட்டும்தான் நவீன மனிதனின் கவனமாகும். இதுதான் அனைத்துப் பிரச்னைகளுக்கும் புள்ளியாகும். முக்கியமாக பெரிய நகரங்களில் இருப்பவர்கள், உலகம் அனைத்திலும் இதே நிலைமைதான் உள்ளது.
மக்கள் ஒருவரையொருவர் மதிப்பதுஇல்லை. இதைத்தான் நகர்ப்புற அலட்சிய மனப்பாங்கு (Urban coldness) எனக் கூறுவர். ஏனென்றால் மக்களுக்கு மற்றவர் களின் துன்பங்கள், இழப்புகள் குறித்து சிறிதளவும் கவலை கிடையாது. எனது பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார்கள், அவர் எந்த நிலமையில் இருக்கிறார் என்பதைக் குறித்த எந்த அக்கறையும் இல்லை.
உங்கள் வேலையை மட்டும் கவனியுங்கள் (Mind your business). இதுதõன் இக்காலத்தின் முக்கியமான காட்சி யாகும். மாறாக இது ஒரு தார்மிகக் கொள்கையாக (Moral principle) மாறிவிட்டது. நிகழ்காலத்தில் தொழில்நுட்பம் இந்த நிலைமையை மேலும் சிக்கலாக மாற்றியுள்ளது. அலைப்÷பசியின் தொடுதிரை நம்மை வீட்டில் இருப்பவர்களிடமிருந்தே துண்டித்து விட்டது.
இது இஸ்லாமிய நாகரிகத்திற்கும், இஸ்லாமிய கலாச்சாரக் கொள்கைகளுக்கும் எதிரானது. இஸ்லாத்திற்கு மிகவும் வெறுப்பானது. இஸ்லாம் மனிதகுலத்திற்கு ஓர் அருளாக வந்துள்ளது. அது எந்த மாதிரியான ஒரு சமூகத்தைக் கட்டமைக்க விரும்புகிறது எனில், அதில் மக்கள் ஒருவருக்கொருவர் அருளாளர்களாக இருப்பார்கள்.
உலகம் மனித உரிமையைப் பற்றி பேசுகிறது. இஸ்லாமோ மனதின் உரிமையைப் பற்றி பேசுகிறது. உலகம் ‘என் வீடு, என் உலகம்’, என்று கூறுகிறது. இஸ்லாமோ, ‘நமது பகுதி, நமது அண்டை வீடு, நமது ஊர்’, எனக் கூறுகிறது. ஒவ்வொரு வீட்டினரும் தமது கதவிற்கு வெளிவரையும் பொறுப்பு என உணரும்போது பூமியில் அருளின் நிழல் பரவத் தொடங்கும். இதுதான் அண்டை வீட்டுத்துவம் ஆகும்.
எந்த ஊரில் ஈமானின் மணமும், நற்குணத்தின் கதகதப்பும், அன்பின் மென்மையும் மகிழ்வுடன் கலந்திருக்கிறதோ, எங்கு வெறும் சுவர்கள் மட்டுமே இணையாமல் மனங்களும் இணைந்திருக்கின்றதோ அதுதான் இஸ்லாமிய சமூகத் தின் ஆன்மாவாகும். உலகை வெற்றி கொள்ளும் சகோதரத்துவம், அன்பின் சுகமான வாசமே இஸ்லாத்தின் அடையாளம். எனவே, நமது ஒவ்வொரு பகுதியையும், ஒவ்வொரு தெருவையும், ஒவ்வொரு ஊரையும் அன்பின் சுகத்தை, உலகை வெல்லும் சகோதரத்துவத்தை, இஸ்லாமிய நற்குணத்தின் ஓர் உயிரோட்டமுள்ள ஒரு தீவாக(ஐண்டூச்ணஞீ) மாற்றிவிடுங்கள். அங்கு கதவு திறப்பதற்கு முன் உள்ளங்கள் திறக்க வேண்டும். சுவர்களைவிட உறவுகள் பலமாக இருக்க வேண்டும்.
இஸ்லாத்தின் பார்வையில் அண்டை வீட்டார்
‘மேலும், நீங்கள் அனைவரும் அல்லாஹ்வுக்கே அடிபணிந்து வாழுங்கள். அவனோடு எதனையும் இணையாக்காதீர்கள். தாய் தந்தையரிடம் நல்ல விதமாக அன்புடன் நடந்து கொள்ளுங்கள்! மேலும் உறவினர்கள், அநாதைகள், வறியவர்கள் ஆகியோருடனும் நல்ல விதமாக நடந்து கொள்ளுங்கள். மேலும் உறவினரான அண்டை வீட்டார், அந்நியரான அண்டை வீட்டார், பக்கத்திலிருக்கும் நண்பர், வழிப்போக்கர், உங்கள் கைவசத்திலுள்ள அடிமைகள் ஆகியோருடனும் நயமாக நடந்து கொள்ளுங்கள்! திண்ணமாக, அறிந்து கொள்ளுங்கள்: வீண் பெருமையிலும், கர்வத்திலும் உழல்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை’ (திருக்குர்ஆன் 4:36)
திருக்குர்ஆனின் இந்த வசனத்தில் மூன்று வித அண்டை வீட்டார்களைப் பற்றி விவரிக்கப்படுகிறது. 1.உறவினரான அண்டை வீட்டார் 2.உறவினரல்லாத அண்டை வீட்டார் 3.தற்காலிக அண்டை வீட்டார். அதாவது பயணத்தோழர், வேலை செய்யும் இடத்தில் உடன் வேலை செய்பவர், சாலையில் செல்லும் போது உடன் செல்பவர், யாரெல்லாம் தற்காலிகமாக உங்களுக்கு அருகில் இருக்கின்றார்களோ அவர்கள் தற்காலிக அண்டை வீட்டார்கள். எனவே, அவர்கள் அனைவரிடமும் அழகிய முறையில் நடந்து கொள்ள புனித குர்ஆன் கட்டளையிடுகிறது.
அண்டை வீட்டாரின் முதல் உரிமை
அவர்களை எந்த விதத்திலும் துன்புறுத்தக்கூடாது. உடலாலோ, பொருளாலோ, மனதாலோ, உணர்வாலோ எந்தத் துன்பத்தையும் ஏற்படுத்தக்கூடாது. அவர்களுடைய கண்ணியத்தையும் புண்படுத்தக் கூடாது தன்னால் அண்டை வீட்டாருக்கு ஏற்படும் அசௌகரியத்திலிருந்து பாதுகாப்பது இறைநம்பிக்கையின் ஒரு நிபந்தனை என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.
‘எவர் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பு கிறாரோ அவர் தனது அண்டை வீட்டாருக்குத் தீங்கு செய்ய மாட்டார். இது ஈமானின் ஒரு நிபந்தனையாகும்’ என நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் மீது மூன்று முறை சத்தியமிட்டார்கள்.
‘தனது அண்டை வீட்டாரைப் பாதுகாக்காத ஒருவர் உண்மையான இறைநம்பிக்கையாளராக இருக்கவே முடியாது. அப்படிப்பட்டவர் சொர்க்கத்தை அடைய முடியாது’ என்றார்கள்.
இப்படிப் பொதுவான அறிவுறுத்தலை வழங்குவதில் இஸ்லாம் திருப்தி அடையவில்லை. மாறாக, தெளிவாக விவரமாக அறிவுறுத்தியுள்ளது. அண்டை வீட்டாருக்கு எந்த விதமான தீங்கும் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அண்டை நிலத்தை அபகரித்தல் பற்றி முக்கியமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கடுமையாகக் கண்டிக்கப்பட்டுள்ளது.
வீடுகள், நிலங்கள், இந்தச் சொத்துகளின் எல்லைகள், வரம்புகள், எல்லைக்கற்கள் (நில அளவை அடையாளங்கள்) அவற்றை மாற்றுவது, அழிப்பது, அதனால் நிலத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அபகரிப்பது (நில அளவை மாற்றுவது) தடை செய்யப்பட்டுள்ளது. அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் நில அளவை அடையாளங்களை அழிப்பவர்கள், மாற்றம் செய்பவர்களைக் கண்டித்துள்ளார்கள். ‘நில எல்லைகளின் அடையõளங்களை மறைப்பவர் அல்லது மாற்றுபவர் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகும்!’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
வீடு கட்டும் போது ஒரு சில அங்குலங்களை மாற்றுதல், அருகில் உள்ள அரசு நிலம் ஆக்கிரமிப்பு, அனுமதியின்றி பிறர் வீடுகளுக்கு முன் வாகனங்களை நிறுத்துதல், பொதுத் தாழ்வாரங்களில், அனைவருக்குமான இடங்களில் உடமைகளை வைப்பது, பின்னர் படிப்படியாக அதை தனிப்பட்ட பயன்பாட்டிற்கு மாற்றிக் கொள்வது, மற்றவர்களின் இடங்களில், தெருக்களில் நீட்டி பால்கனிகளை அமைப்பது, படிக்கட்டுகள் அமைப்பது. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் அண்டை நிலத்தை அபகரிப்பதாகும். நிலத்தை விரிவுபடுத்தி அபகரிக்கும் நிகழ்வுகளாகும். இஸ்லாம் அண்டை வீட்டாரை மதிப்பது மட்டுமல்ல, அவரது தன்மானத்தையும் மரியாதையையும் பாதுகாப்பதைக் கடமையாக அறிவித்துள்ளது.
அண்டை வீட்டார் ஒருவருக்கொருவர் நெருங்கி வாழ்கின்றனர். அவர்களின் வீடுகள் ஒன்றுக்கொன்று அருகில் உள்ளன. எனவே அண்டை வீட்டார்களை மற்றவர்களுடன் ஒப்பிடும்போது தங்களின் குற்றங்குறைகள், ரகசியங்கள், பலவீனங்கள் அறியவரும். எனவே அவர்களின் ரகசியங்களை வெளிப்படுத்துதல், பலவீனங்களைப் பரப்புதல் ஆகியன அண்டை வீட்டாரைக் காயப்படுத்துவதாகும். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் இவற்றைக் கடுமையாகக் கண்டித்து தடை செய்தார்கள்.
அண்டை வீட்டார் மட்டுமின்றி சக தோழர்கள், நம்முடன் வேலை செய்பவர்கள் (Colleagues) அவர்களுக்கும் இந்த உரிமைகள் உண்டு. அவர்களின் ரகசியங்களைப் பாதுகாக்க வேண்டும். அவர்களின் குறைகளை, பலவீனங்களை மறைக்க வேண்டும்.
ஆனால் இந்தத் தீமை பொதுவானதாகி விட்டது. சுற்றுப்புறங்களில் உள்ள குடியிருப்புகளில், பொதுவாக பெண்களிடையே இந்தத் தீமை உள்ளது. அலுவலகங்கள், பணியிடங்களில் ஆண்கள் இதற்கு ஆட்படுகின்றனர். இது அலுவலக அரசியல் (Office Politics) எனப்படும். ஒரு குழுவாக அமைத்துக்கொண்டு தங்கள் அலுவலகப் பணியிடத் தோழர்களின் குறைகள், பலவீனங்களைக் கண்டறிவது, பின்னர் அவற்øறக் கிசுகிசுவாகப் பரப்புதல், அதை ஒரு பெரிய சர்ச்சையாக்குதல் போன்றவற்றில் ஈடுபடுகின்றனர்.
நபி(ஸல்) அவர்கள், இந்தப் பழக்கத்தை ஈமானின் பலவீனம் என அடையாளப் படுத்தியுள்ளார்கள். இக்காரியங்களில் ஈடுபடுபவர்களை மிகக் கடுமையாக நெஞ்சத்தை பதறச் செய்யும் வார்த்தைகளால் கண்டித்துள்ளார்கள். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘ஓ சமுதாயத்தினரே! நாவினால் இறைநம்பிக்கையைப் பறைசாற்றுகிறீர்கள். ஆனால் இறைநம்பிக்கை உங்கள் இதயங்களில் இன்னும் நுழையவில்லை. முஸ்லிம்களைப் பற்றி புறம் பேசாதீர்கள். அவர்களின் மறைவான பலவீனங்களைப் பற்றி அலசாதீர்கள். யார் தன் சகோதரனின் குறைகளைத் தமது குழுவில் பேசுகிறானோ, அல்லாஹ் அவனது மறைவான குறைகளை வெளிப்படுத்தி விடுகிறான். ‘யார் மற்றவர்களின் மறைவான குறைகளைப் பற்றி பேசுகிறானோ அல்லாஹ் அவனை அவன் வீட்டில் கேவலப்படுத்தி அவமானப்படுத்துவான்’
அண்டை வீட்டாரைப் போல பயணத்தில் இருப்போரின் உரிமைகளும் கவனத்தில் கொள்ளத்தக்கது. போக்குவரத்து சட்டங்களை மீறுவதும் இதில் அடங்கும். தவறான திசையில், தவறான பாதையில் வாகனம் ஓட்டுதல், சிக்னலை மீறுவது, சாலை விதி வேகக்கட்டுபாட்டை மீறுவது, முறையற்று வாகனங்களை முந்துவது, சாலை களில் ஸ்டண்ட்(Stunt) செய்வது, தேவையில்லாமல் ஒலி(Horn) எழுப்புவது, விதிகளை மீறி அதிக பயணிகளை வண்டியில், பைக்கில் ஏற்றிச் செல்வது. இந்தச் செயல்கள் அனைத்தும் மற்றவர்களின் உயிர்களுக்கும், உடைமைக்கும், சாலையைப் பயன்படுத்துபவர்களின் உயிருக்கும், உடமைக்கும் ஆபத்து விளைவிக்கும் செயல்களாகும். போக்குவரத்தை குழப்பமாகவும் நிச்சயமற்ற தாகவும் ஆக்குகிறது.
இவ்விஷயத்தில் இஸ்லாம் எந்தளவுக்கு உணர்வுப்பூர்வமாக இருக்கிறது என்பதை இந்தச் செய்தியிலிருந்து அறியலாம்: ‘ஒரு போரின் போது பயண வழியில் (போருக் குச் சென்ற) மக்கள் நிறுத்தி தங்குவதற்குக் கூடாரம் அமைத்தனர். நபி(ஸல்) அவர்கள் கவனித்தார்கள், சில கூடாரங்கள் வழித் தடத்தை மறித்து அமைந்திருந்தன. இதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் ‘யார் வழித்தடத்தை மறித்து, இடையூறு செய்துள்ளார்களோ அவர்களது ஜிஹாத் ஏற்றுக் கொள்ளப்படாது’ என்று கூறினார்கள்.
நம் காலத்தில் தவறான இடத்தில், தவறான முறையில் பார்க்கிங் செய்தல், சாலைகளில் குப்பை கொட்டுதல், தெருக்களில் அல்லது வீடுகளின் முன் கும்பலாகக் கூடி நேரமில்லாத நேரத்தில் உட்கார்ந்து கொண்டிருப்பது வீட்டு முன் இரு சக்கர வாகனங்களை நிறுத்தி மணிக்கணக்கில் அரட்டை அடிப்பது நம் இளைஞர்கள் வழக்கம். ரயில்கள், பேருந்துகள், விமானங்களில் தவறாக நடந்துகொள்வதன் மூலம் பக்கத்தில் உள்ளவர்களுக்குப் பிரச்னையை ஏற்படுத்துதல், புகையிலை அல்லது வெற்றிலை போட்டு துப்புதல், பொது இடங்களில் புகைபிடித்தல் போன்ற பல செயல்கள் மக்களைத் துன்புறுத்தும். இதுபோன்ற அனைத்து செயல்களையும் இறைநம்பிக்கையாளர்கள் தவிர்க்க வேண்டியது அவசியம்.
இஸ்லாம் அறிவுரையையும் நல்லெண்ணத்தையும் அண்டை வீட்டாரின் உரிமை, தற்காலிக அண்டை வீட்டாரின் உரிமை என்றும் அறிவிக்கிறது. இதுவும் இஸ்லாத்தின் ஒரு சிறப்பம்சமாகும். அண்டை வீட்டாருக்கு நல்லது செய்ய வேண்டும். நல்லதே நினைக்க வேண்டும். இதனை இறைநம்பிக்கையாளரின் ஓர் அம்சம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே நல்லது செய்வதின் ஓர் அம்சம் அவர்களின் இவ்வுலக வாழ்க்கை, மறுமையின் நலனில் அக்கறை கொள்ள வேண்டும். அவர்களின் சீர்திருத்தம் குறித்துக் கவனம் செலுத்த வேண்டும். அவர்களைப் பயிற்றுவிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். அண்டை வீட்டாரில் யாரேனும் ஒருவரிடத்தில், ஏதேனும் மார்க்கப் பற்றில் குறை காண்பீராயின், அல்லது நல்லொழுக்கத்தில் குறை கண்டால் சாதுரியத்துடன் அவரது பலவீனத்தை குறைகளைப் பரப்பாமல் அவரை வருத்தம் அடையச் செய்யாமல் ஆத்மார்த்தமாகச் சரி செய்ய முயலுங்கள். அவர்களது குழந்தைகளைப் பற்றியும்
கவலை கொள்ளுங்கள்.
‘அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும், நம்பிக்கை கொண்டவர் அண்டை வீட்டாரிடம் இரக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும்’ என நபி(ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள். உறவுகளில் இரக்கம் என்பது மற்றவர்களுக்குத் தகுதியான உரிமையை
விட அதிகமாகக் கொடுப்பதாகும். நம் உரிமையைப் பொறுத்தமட்டில், அண்டை வீட்டாருக்குக் கிடைப்பதைவிட குறைவானதிலேயே திருப்தியடைய வேண்டும். நம் உரிமையை வேறு யாராவது பறித்துக் கொண்டாலோ, உரிமையை கிடைக்கச் செய்யாமலிருந்தாலோ, சிரமம் கொடுத்தாலோ, அவரை மன்னிக்க வேண்டும்.
உறவுகளில் கருணையின் பொருள் என்னவென்று ஒரு பிரபல நபிமொழி மூலம் அறியலாம்.
அலீ(ரலி) அவர்களுக்கு, நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு அறிவுரை வழங்கினார்கள்: ‘உங்களைக் கொடுமைப்படுத்தியவரை மன்னியுங்கள், உங்களுடன் உறவை முறித்தவருடன் உறவை இணையுங்கள். உங்களை மோசமாக நடத்துபவர்களிடம் கூட அன்பாக நடந்து கொள்ளுங்கள். உங்களுக்கு எதிராக இருந்தாலும் உண்மையைப் பேசுங்கள்’
இது இஸ்லாத்தின் மிகச் சக்திவாய்ந்த சான்றாக இருக்கும். இஸ்லாமிய நாகரிகத்தின் நற்பண்புகளை உலகுக்கு எடுத்துரைக்க, இது மிகவும் சக்திவாய்ந்த கருவியாக இருக்கும். இதுவே இந்தப் பரப்புரையின் முக்கிய நோக்கமாகும். இதில் எந்த ஐயமும் இல்லை. உலகம் முழுவதும் கோவிட் தொற்று நோய் பரவிய போது முஸ்லிம்கள் கூட்டாகச்செயல்பட்ட விதம் மிகச் சிறப்பாக வெளிப்பட்டது. ஆனாலும் இஸ்லாத்தின் கொள்கைகளைப் பொறுத்த வரையில் இஸ்லாத்திற்கான முன் மாதிரியாக (Model) இருக்க வேண்டும். அதற்கு முஸ்லிம்களாகிய நமது நடைமுறை வாழ்க்கையில் உள்ளது.
நில ஆக்கிரமிப்பு, நம் சமூகத்தில் சகஜ மாகிவிட்டது. முஸ்லிம்கள் எல்லா இடங்களிலும் அசுத்தத்தைப் பரப்புவதில் பெயர் கெட்டுள்ளனர். வாகனங்களை முறையற்று நிறுத்துவது பல வீடுகளின் பிரச்னை மட்டுமல்ல. மாறாக, பள்ளிவாசல்களுக்கு முன்பாகவும் இது வழக்கமாகி விட்டது.
இது இஸ்லாத்தை தவறாகச் சித்திரிக்கின்றது. அண்டை வீட்டாரிடையே நாளுக்கு நாள் சண்டை சச்சரவுகள், படித்தவர்கள் மத்தியிலும் பல இடங்களில் சகஜமாகி விட்டது. இளைஞர்கள் கூட்டம் இரவு வெகு நேரம் வரை சத்தமாகப் பேசுவதும் பலமாகச் சிரிப்பதும் பெரும்பாலான முஸ்லிம் பகுதிகளின் அம்சமாகும்.
இச்செயல்களால் அன்றாடம் நமது நற்செயல்களை வீணாக்கி வருகிறோம். மேலும் மற்றவர்களின் பாவங்களை நாம் நமது பெயருக்கு மாற்றிக்கொண்டு வருகிறோம். நமது பகுதிகள், நமது ஊர்கள், நமது குடியிருப்புகள், நமது காலனிகள் இஸ்லாமிய அண்டை வீட்டாருக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்.
ஒரு சிறந்த முன்மாதிரி இஸ்லாமிய நாகரிகம், ஓர் இலட்சிய இஸ்லாமிய நாகரிகத்தின் கன வாகும். அந்தக் கனவு நம் கண்களில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அந்தச் சிறந்த முன்மாதிரி அண்டை வீட்டை நினைவில் கொள்ளுங்கள். அந்த இலட்சிய முன்மாதிரி இஸ்லாமிய நாகரிகத்தின் முதல் செங்கல் இதுவாகும்.
நமது பகுதிகள், நமது குடியிருப்புகள், அண்டை வீட்டாரைப் பற்றிய இஸ்லாமிய போதனைகளின் மாதிரியாக (Model) மாறிவிட்டால் இதுவே இஸ்லாத்தின் சக்திவாய்ந்த சான்றாக, எடுத்துக்காட்டாக இருக்கும். இது இஸ்லாமிய நாகரிகத்தை நோக்கிய முதல் பயனுள்ள படியாக இருக்கும். இது தீனை நிலைநிறுத்துவதற்கான வழிமுறையாகும்.
இது நமது சக்திக்கு உட்பட்டது. இது இன்றே செயல்படுத்தக் கூடியது. இதன் மூலம் நாம் உலகத்திற்கு இஸ்லாத்தின் அருளான ஒளிக்கீற்றைக் காட்டலாம். நமது பகுதியை இலட்சிய (Ideal) பகுதியாக மாற்றுவோம்.
தமிழில்: நாட்டாம்கார் அமீனுர்ரஹ்மான்