மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

அல்லாஹ் வடிவமைக்கும் அழகிய சமூகம்

இந்த மாத இந்தியா 32
k. ரியாஸ், ஜனவரி 1-15, 2026



இஸ்லாமிய வெறுப்புக்
குற்றங்கள்



எட்டி உதைக்கும் அதிகாரம்

கான்பூர் தேஹாத்தில் உள்ள அக்பர்பூர் மருத்துவக் கல்லூரியில் 2025 டிசம்பர் 16 அன்று ருக்ஸர் என்ற எட்டு மாத கர்ப்பிணிப் பெண் தன் கணவர் உஸ்மானுடன் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்குச் சென்றபோது, மருத்துவக் கல்லூரியில் பணிபுரியும் கல்லூரி முதல்வருக்கு நெருக்கமானவரான ரோஹித் யாதவ் உஸ்மான் வளாகத்தில் குட்கா சாப்பிட்டதாகக் குற்றம் சாட்டி 500 ரூபாய் அபராதம் கோரினார். ஆனால் குற்றச்சாட்டை மறுத்து உஸ்மான் பணம் கொடுக்காததால் வாக்குவாதம் ஏற்பட்டது. ரோஹித் யாதவ் உஸ்மானைத் துன்புறுத்தி அவரது மொபைல் போனைப் பறித்து 340 ரூபாயை வலுக்கட்டாயமாக எடுக்க முயன்றார். இதைத் தடுக்கச் சென்ற ருக்ஸரை ரோஹித் வயிற்றில் உதைத்துள்ளார். பின்னர் அவரது உடல்நிலை மோசம் அடைந்ததையடுத்து அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. புகார் அளித்தும் ரோஹித் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

பசுக்குண்டர்களின் அராஜகம்

டிசம்பர் 8ஆம் தேதி மத்தியப் பிரதேசத்தின் சிம்ரோலில் பசுப் பாதுகாவலர்கள் எனக் கூறிக் கொள்ளும் பசுக் குண்டர்கள் ஒரு கால்நடை போக்குவரத்து வாகனத்தைத் துரத்திச் சென்று நிறுத்தி, லாரியில் இருந்தவர்களைத் தாக்கினர். அனுமதிக்கப் பட்டதை விட அதிக எருமைகளை ஏற்றிச் சென்றதாகக் கூறி எருமைகளை அவிழ்த்து விட்டனர். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.

மதவெறிக் கும்பலின் அத்துமீறல்

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள மியாவாலாவில், டிசம்பர் 12ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொழுகை நடத்த அங்கிருந்த முஸ்லிம்கள் முயன்றபோது இந்துத்துவக் கும்பல் அதற்கு இடையூறு செய்து அச்சுறுத்தினர். இந்து தேசியவாதக் குழு ஒன்று அவர்களிடம் ‘பொது இடங்களில் தொழுகை நடத்தக் கூடாது என்றும், வீட்டில் பிரார்த்தனை செய்யுங்கள்’ என்றும் மிரட்டியுள்ளனர்.

ஒலிபெருக்கித் தடை

முசாபர் நகரிலுள்ள மதீனா மஸ்ஜிதில் அதிக சப்தத்தில் அல்லது அனுமதியின்றி ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படுவதாக் கூறி அண்மையில் போலீசார் நடவடிக்கை எடுத்தனர். அப்போது கச்சிசதக் புறக்காவல் நிலையப் பொறுப்பாளர் வினோத் சவுத்ரி இர்ஃபான் என்பவரைத் தள்ளி அடித்து துன்புறுத்தியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டு தொடர்பான வீடியோவும் வைரலானது. அதைத் தொடர்ந்து ஜம்மியத்தே உலமா ஹிந்த் உறுப்பினர்கள் நடவடிக்கை எடுக்கக் கோரி மூத்த காவல் கண்காணிப்பாளரிடம் ஒரு குறிப்பாணையைச் சமர்ப்பித்துள்ளனர்.

மதவெறிப் படுகொலை

பீகாரில் உள்ள நவாடாவில் 40 வயதான முஹம்மது அத்ஹர் ஹுசைன் மத அடை யாளம் காரணமாக இந்துத்துவா கும்பலால் தாக்கப்பட்டு காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2025 டிசம்பர் 5ஆம் தேதி இரவு இறந்தார். அவர் இறப்பதற்கு முன் அத்ஹர் தாக்குதலை விவரித்தார். ‘ஐந்து பேர் என்னைத் தடுத்து, பைகளைச் சரிபார்க்கத் தொடங்கினர், என்னை ஓர் அறையில் அழைத்துச் சென்று பூட்டினர், நான் ஒரு முஸ்லிம் என்பதை உறுதிப்படுத்த என் ஆடைகளை அகற்றச் சொல்லி என்னை அடித்து உடலில் பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்றனர். அவர்கள் என் மார்பில் நின்று என்னை மிதித்தார்கள். என் வாயிலிருந்து இரத்தம் வழிந்தது, மேலும் அவர்கள் என்னை அடிக்க செங்கற்களையும் பயன்படுத்தினார்கள். யாரோ ஒருவர் போலீசாரை அழைத்தார். பின்னர் நான் அழைத்துச் செல்லப் பட்டேன்’ என்று அத்ஹர் கூறிய வீடியோ வெளியாகி உள்ளது.

வன்மத்தின் உச்சம்

பசுப் பாதுகாவலர் என்று தன்னை அழைத்துக் கொள்ளும் பசுக் குண்டர் ரிஷப் தாக்கூர் ஒரு பொதுக் கழிப்பறையில் பாபர் கழிப்பறை, மௌலானா அர்ஷத் மதனி கழிப்பறை என்று சுவரெழுத்துகளை எழுதி ஒரு வீடியோவைப் பதிவு செய்தார். அதில் அவர் அந்த வாசகங்கள் மீது சிறுநீர் கழிப்பது போன்று சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டார்.

பசுக் குண்டர்களின் தொடர் தாக்குதல்கள்

மகாராஷ்டிராவின் புனே நகரத்தில் நாராயண்கான் பகுதியில் 2025 டிசம்பர் 12 அன்று பஜ்ரங் தள பசுக் குண்டர்கள் இறைச்சி கொண்டு சென்ற காரை காவல்துறையினரிடம் ஒப்படைத்த பிறகு சேதப்படுத்தினர். பின்னர் அவர்கள் ஒரு புல்டோசரைப் பயன்படுத்தி வாகனத்தை அழித்து, பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சியைப் புதைத்தனர்.

தொடரும் அநீதிகள்

ஆந்திரப் பிரதேச மாநிலம் திருப்பதியில் 2025 டிசம்பர் 14 அன்று அடல் மோடி நல்லாட்சி யாத்திரை பொதுக் கூட்டத்தில் உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி காஷ்மீரில் 370ஆவது பிரிவு ஒழிப்பு, முத்தலாக் குற்றமாக்கல், இஅஅ, ‘ஏக் பாரத் ஸ்ரேஷ்ட பாரத்’, வக்ஃப் திருத்த மசோதா ஆகியவற்றை எடுத்துரைத்தார். மத மாற்றம், கலவரங்கள், லவ் ஜிஹாத், லேண்ட் ஜிஹாத், டூக் ஜிஹாத் ஆகியவற்றிற்கு எதிரான சட்டங்களைச் செயல்படுத்தியதை அவர் குறிப்பிட்டார். அவற்றுக்கு எதிராகப் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை (ஙூஞுணூணி) கொள்கையைக் கோரினார்.

‘லேண்ட் ஜிஹாத்’ மீதான நடவடிக்கை 10,000 ஏக்கருக்கும் அதிகமான அரசு நிலங்களை நில ஜிஹாதிகளால் ஆக்கிரமித்ததாகக் கூறப்படுவதிலிருந்து விடுவிக்க வழிவகுத்தது என்றும், மதரசா வாரியத்தைக் கலைக்க முன்மொழியப்பட்ட மசோதாவையும் குறிப்பிட்டார்.

நல்லுபதேசம் செய்வதற்குத் தண்டனையா?

உத்தரப்பிரதேசத்தின் கன்னோஜி நகரின் தாதியாவில் உள்ள ஆதர்ஷ் நகர் இன்டர் கல்லூரியின் போக்குவரத்து விழிப்பு உணர்வு நிகழ்வில் சிறப்புரையாற்றிய போக்குவரத்துத் துறைத் துணை ஆய்வாளர் முஹம்மத் அஃபாக் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனைகளைத் தமது உரையில் மேற்கோள் காட்டிப் பேசிய தற்காகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மாணவ மாணவிகளுக்கு மத்தியில் உயிர் எவ்வளவு முக்கியமானது எனவும் அதிலும் பெண்களின் உயிர் எந்த அளவுக்குப் பாதுகாக்கப்படவேண்டும் என்றும் தன் உரையின் நடுவே பெண் சிசுக்கொலைக்கு எதிரான நபிகள் நாயகத்தின் போதனைகளைப் பகிர்ந்து கொண்டார். இந்த உரைத் துணுக்கை மட்டும் வெட்டி எடுத்து இணையத்தில் பரப்பப்பட்டன. விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தளம் போன்ற ஃபாசிஸ அமைப்புகள் அஃபாக்கிற்கு எதிராக மாநில காவல் துறைத் தலைவர் வினோத் குமாரிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து காவல்துறை அஃபாக்கை பணிநீக்கம் செய்துள்ளது.

 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர தொடர்

மேலும் தேடல்