
அப்(ஆ)லா அல் கஹ்லாவி எகிப்து நாட்டில் வாழ்ந்து சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த ஓர் இஸ்லாமியப் பெண் அறிஞரும் பிரபல அழைப்பாளரும் சமூக சேவையாளருமாவார்.அவர் மரணிக்கும் போது அவருக்கு வயது 72.
கலாநிதி அப்லா அல் கஹ்லாவியின் தந்தை எகிப்தில் ஒரு பிரபல கலைஞராக,பாடகராக விளங்கியவர்.பின்னர் கலைத்துறையைத் துறந்து இஸ்லாமியப் பாடல்கள், நஷீதுகள்,கஸீதாக்கள் முதலானவற்றை மாத்திரம் இசைத்து வந்தார்.பிற்காலத்தில் இவர் ‘மத்தாஹூந் நபி' நபி புகழ் பாடகர் என்று அழைக்கப்படலானார்.தனது மகள் அப்லா சன்மார்க்கத் துறையில் கற்றுத் தேற வேண்டும் என்பது அவரது விருப்பமாக இருந்தது.தனது தந்தையின் விருப்பப்படி அப்லாவும் ஷரீஆ துறையைத் தனது
சிறப்புத் துறையாகத் தேர்வு செய்தார்.
1974ஆம் ஆண்டு பிக்ஹ் - இஸ்லாமிய சட்டத்துறையில் தனது முதுமாணிப் (M.A) படிப்பையும் 1978ஆம் ஆண்டு அதே துறையில் தனது பட்டப் பின் கலாநிதிப் படிப்பையும் (Ph.D.) வெற்றிகரமாகப் பூர்த்தி செய்தார் அப்லா.
ரியாத் பல்கலைக்கழகம், அல் அஸ்ஹர் பல்கலைக்கழகம், மக்கா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பிக்ஹ் துறையில் பேராசிரியராகப் பணிபுரிந்த இவர் மக்கா பல்கலைக்-கழக ஷரீஆ துறைத் தலைவியாகவும் குறிப்பிட்ட காலம் பதவி வகித்தார். 1987 முதல் 1989 வரை இரண்டாண்டுகள் மக்காவில், ஹரம் ஷரீஃபில் பெண்களுக்கான சன்மார்க்க வகுப்புக்களை நடத்தும் பெரும் பேற்றையும் பெற்றார் கலாநிதி அப்லா.
பின்னர் தனது தாய் நாட்டுக்குத் திரும்பிய இவர்,கெய்ரோவில் அமைந்துள்ள தனது தந்தையின் பெயர் தாங்கிய மஸ்ஜிதில் தொடர் சன்மார்க்க விரிவுரைகளை நிகழ்த்தி வந்தார்.இவரது விரிவுரைகள் பெரும்பாலும் ஆன்மிகம் சார்ந்ததாகவும்,இஸ்லாமிய சட்ட விளக்கங்கள் தொடர்பானவையாகவும் அமைந்தன.எகிப்துடைய,பல அரபு நாடுகளுடைய தொலைக்காட்சி சேவைகளிலும்,வானொலி சேவைகளிலும் இவரது மார்க்க நிகழ்ச்சிகள் ஒளி,ஒலி பரப்பாகின.
பொதுமக்களைச் சன்மார்க்க வழியில் நெறிப்படுத்துவது இவரது நிகழ்ச்சிகளின் முக்கிய இலக்காக அமைந்தது எனலாம்.ஜாஹிலிய்ய வாழ்க்கை வாழ்ந்த பல பெண்கள் இவரால் பாவமன்னிப்புக் கோரி மீண்டார்கள்.அரபுலக சினிமா நடிகைகள் பலர் இவரது உரைகளாலும் வழிகாட்டல்களாலும் கவரப்பட்டு தூய இஸ்லாமிய வாழ்வு நோக்கித் திரும்பினார்கள்.
பிற்காலத்தில் இவர் தனது முகநூல் பக்கத்திற்கூடாக ‘அல் பாகியாதுஸ் ஸாலிஹாத்' என்ற பெயரில் ஒரு தொடர் நிகழ்ச்சியை நிகழ்த்தி வந்தார்.கலாநிதி அப்லா ஓர் அறிஞராக, அழைப்பாளராக மட்டுமன்றி ஒரு சமூக சேவையாளராகவும் விளங்கினார்.‘அல் பாகியாதுஸ் ஸாலிஹாத்' என்ற பெயரில் ஒரு சமூக சேவை நிறுவனத்தை நிறுவி அதன் மூலமாகப் பல்வேறு சமூகப் பணிகளை முடுக்கி விட்டார்;அநாதை இல்லங்களை நிறுவினார்; முதியோர் இல்லம், புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையம் உட்பட பல சமூக நல வேலைத்திட்டங்களையும் வெற்றிகரமாக முன்னெடுத்தார்.‘அல் பாகியாதுஸ் ஸாலிஹாத்' என்ற பெயரில் ஒரு மஸ்ஜிதையும் நிறுவினார்.
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு ஆக்சிஜன் கருவிகளைப் பெற்றுக் கொடுக்கும் ஒரு திட்டத்தையும் முன்னெடுத்தார்.இதுவே அவர் இறுதியாக முன்னெடுத்த பணியாகும்.கலாநிதி அப்லா அல் கஹ்லாவியின் இறப்பையொட்டி ஷெய்குல் அஸ்ஹர்,எகிப்தின் தலைமை முப்தி உட்பட நாட்டின் முக்கியப் பிரமுகர்கள் பலர் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்தனர்.
‘அப்லா அல் கஹ்லாவி ஒரு ஸாலிஹான பெண்ணுக்குச் சிறந்த உதாரணமாக விளங்கியவர்;அழைப்புப்பணியைத் தனது பணியாகக் கண்டவர்;உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர்;தனது அறிவால் ஒளி பாய்ச்சியவர்;ஏழைகளுக்கும் அநாதைகளுக்கும் உதவிக்கை நீட்டியவர்'என்று ஷெய்குல் அஸ்ஹர் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
‘அப்லா அல் கஹ்லாவியிடம் இல்ம், அமல் (அறிவு,செயல்) ஆகிய இரண்டும் இணைந்திருந்தன.ஷரீஆ அறிவைப் பெற்று அதைப் போதித்து வந்த அவர்,பொதுப் பணியிலும் ஈடுபட்டார். எகிப்தில் சமூக சேவைகளுக்கான மிகப்பெரிய அமைப்புக்களில் ஒன்றாக அவர் உருவாக்கிய நிறுவனம் விளங்குகின்றது' எனக் குறிப்பிட்டுள்ளார் எகிப்தின் தலைமை முப்தி அவர்கள்.
இந்த இலட்சியப் பெண்ணுடைய இறுதி வஸிய்யத்தில் அவர் குறிப்பிட்ட முக்கியமான ஓர் அம்சம் இருக்கின்றது.‘நாங்கள் உருவாக்கிய ‘அல் பாகியாதுஸ் ஸாலிஹாத்' நற்பணி நிறுவனம் தனது பணிகளை இடை நிறுத்தாமல் தொடர வேண்டும்.அதன் மூலம் எமக்கு நன்மைகள் தொடர்ந்து கிடைத்துக் கொண்டே இருக்க வேண்டும்' என்பதே அந்த வஸிய்யத்.
எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த இலட்சியத் தாயின் நற்பணிகள் அனைத்தையும் ஏற்று அங்கீரிப்பானாக;அன்னாருக்கு உயர்ந்த சுவன பதவியை வழங்கியருள்வானாக! இத்தகைய நல்லடியார்களை முன்மாதிரியாகக் கொண்டு வாழ்வை அமைத்துக் கொள்ளும் பேற்றை நம் அனைவருக்கும் பொதுவாகவும்,நமது பெண்மணிகளுக்குக் குறிப்பாகவும் கொடுத்தருள்வானாக!