மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

மேடை

அக்கரைப் பச்சை - 31
-ஜாரினா ஜமால் , ஜனவரி 16-31, 2026


 

அக்கரைப் பச்சை 31

ஜரினா ஜமால்

அக்காவின் அறையிலேயே சாலிஹா அதிகாலைத் தொழுகையான ஃபஜ்ர் தொழுதுவிட்டு தூங்கினாள்.
வெளிக்கதவு தட்டும் சப்தம் கேட்டு எழுந்து ஹாலுக்கு வந்தாள்

‘வாங்க மாமி! நான்தான் டீ குடிக்க எழுப்பினேன். மாமியை உசுப்புங்க.லேட்டானா பேசப்போறாங்க’ என்று கூறிக்கொண்டே சாயக் கோப்பைகளுடன் சாதிக்கா உள்ளே வந்தாள்.

‘நாங்க எந்திரிச்சி தொழுதுட்டு, குர்ஆன் ஓதிட்டு, காப்பி கலந்து குடிச்சிட்டுத் தான் தூங்கினோம்’ என்றாள் சாலிஹா.

‘ஆமா..! மாமி தொழுதுட்டு எங்களுக்கும் சேர்த்து டீ போட்டு வச்சிட்டுத்தான் கொஞ்ச நேரம் தூங்குவாங்க’

‘எங்கே ஹஸினாவைக் காணோம்?’ என்று சாலிஹா கேட்க எல்லோரும் வட்டமிட்டு உட்கார்ந்தார்கள். சொல்லிக்கொண்டிருக்கும்போதே ஹஸினா வந்துவிட்டாள். தன் அறையிலிருந்து ஓமப்பொடி பாக்கெட்டை எடுத்து வந்தாள்.
பிஸ்கட்டுடன் டீ குடித்தார்கள்.

‘இன்னைக்கு என்ன நாஷ்டா?’

‘சாச்சியை செய்யச் சொல்லுங்கள்’

ஆமினாக்கா எழுந்து வந்தாள் ‘நேற்றே கறியோடு நெஞ்செலும்பு வாங்கி
வந்தேன். தக்கடி போடலாம். உங்களுக்கும் லீவுதானே?’

‘கடையில் கொஞ்சம் கணக்குப் பாக்கணும். ஃபஜ்ர் தொழுதுட்டு வரும்போது மாமா வந்தாங்க. அலி பாத்துமா கண்ணா வந்திருக்காங்களாம். ரஷிதா மாமி
சாச்சிக்கு ஃபோன் போடுறதாச் சொன்னாங்களாம்’ என்றான் தஸ்தகீர்

‘சாச்சி வந்திருக்காங்களா? பாத்து எத்தனை வருஷமாச்சு’ பீவியம்மாவோடு பிறந்த ஒரே தங்கையான சாச்சியைப் பார்க்க ஆர்வமானாள் சாலிஹா.

‘சரி சரி உடனே ஓடிடாதீங்க. நான் கிரிக்கெட் விளையாடிட்டு வர்ரேன். தக்கடி சாப்பிட்டுட்டு கண்ணா வீட்டுக்கும் கொஞ்சம் கொண்டு போகலாம். சாச்சி மதிய
சாப்பாட்டுக்கு மேல் கொண்டுபோய் விடவா?’ என்றான் சுல்தான்.

‘வேண்டாம்பா! நீ வந்து நாஷ்டா பண்ணிட்டு கூட்டிப்போய் விட்டுடு சரி தானேக்கா?’ என்று ஆமினாவைப் பார்த்துக் கேட்டாள் சாலிஹா.

‘என்னவோமா! ஒரு வாரமாவது இந்தப்பிள்ளைகளோடு இருப்பே. நல்லது கெட்டது சொல்லிக் கொடுப்பேன்னு நெனச்சேன்’

‘அக்கா! எல்லாருக்கும் எல்லாம் தெரியும். நாமளும் கொஞ்சம் அப்படி இப்படி அட்ஜஸ்ட் பண்ணி நடக்கணும்.அது செய்யல,இது செய்யல, அது நல்லா
இல்லன்னு சொல்லுற மாதிரி, இது யார் செஞ்சா? நல்லா இருக்கு! அந்த வேலை என்னய விட அழகா செஞ்சுட்டியேன்னு சொல்லிப் பாருங்க! அடுத்த முறை
அதை விட நல்லாச் செய்வாங்க’ என்று மருமகள்களுக்குக் கேட்காதபடி மெது
வாகப் பேசினாள் சாலிஹா.

‘பாருங்கக்கா..! நேத்துத்தான் சொல்
லிக் கொடுத்தேன். பாத்ரூமைப் போய்ப் பாருங்க டைல்ஸ் எல்லாம் கண்ணாடியா மின்னுது. சாதிக்கா அடுப்படியை ஒதுக்க, ஹஸினா கிளீன் பண்ண’ என்று பெருமிதம் கொண்டாள் சாலிஹா.

‘சரி சரி மாவ எடுங்க! தக்கடி ரெடி பண்ணுவோம்’

‘மாமி நாங்களும் கத்துக்குறோம்’

‘கத்துக்குங்க.. கத்துக்குங்க! கெட்டிக்காரப் புள்ளைகளுக்குச் சீக்கிரம் வரும். கைப் பக்குவம் வரணும்’ சொல்லிக் கொண்டே வறுத்த மாவையும், வறுக்காத பச்சரிசி மாவையும் தாம்பாளத்தில் ஒன்றாக்கினாள்.

‘ஒரே மாவாகப் போடக்கூடாதா மாமி..’

‘கொழக்கட்டை சரியாக வராதும்மா.. உடைஞ்சு உதிர்ந்திடும்.ஹஸினா!அஞ்சாறு பெரிய வெங்காயத்தை உரிச்சு பொடியா நறுக்குமா.சாதிக்காமாதேங்காயை உடைச்சு திருகு’ என்று சொல்லிக் கொண்டே குக்கரில் நெஞ்செலும்புக் கறியைத் தாளித்து வேக விட்டாள்.

விசில் வருவதற்குள் ஒரு கற்றை கருவேப்பிலை, ஒரு புதினா கட்டு, கொஞ்சம் மல்லித்தழைகளைக் கழுவி மாவில் போட்டாள். ஐந்தாறு பச்சை மிளகாய்களை அரிந்து போட்டாள். திருவிய அரை முறித் தேங்காயையும் மாவில் கொட்டினாள்.ஹஸினாவிடமிருந்து வெங்காயத்தை வாங்கி மாவில் கொட்டி,உப்புத்தூள் தூவி கலந்தாள்.இருவரும் பிரமிப்பாக பார்த்தார்கள். ‘இதுக்கு இம்பூட்டு வேலையா மாமி.?’

‘இந்தப் பலகாரங் களெல்லாம் இப்போ யார் செய்றா? முன்னெயெல்லாம் கல்யாண வீட்ல இரவிலேயே பெரிய பானையில் தக்கடி போடுவாங்க. சில ஊர்க்காரங்க திக்கடி என்பாங்க. தலை, குடல், கறி எல்லாம் தாராளமாப் போட்டு காலை பசியாற அதுதான். இப்போ இன்ஸ்டண்டா போடுறோம். முதலிலே சொல்லியிருந்தா ராத்திரியே போட்டிருக்கலாம். இப்போ போட்டு மதியம் தான் திங்கப்போறோம். உங்க பிள்ளைங்களக் கவனிங்க! நா செஞ் சுட்டு கூப்பிடுறேன்’

குக்கரைத் திறந்து ஆணத்தைக் கொஞ்சம் அள்ளி மாவில் ஊற்றி ஊற வைத்தாள். வாய் அகலமான பாத்திரத்தில் குக்கரில் உள்ள கறியைக் கொட்டி மசாலாக்கள் கலந்து நிறைய தண்ணீர் சேர்த்து அடுப்பில் ஏற்றினாள். உப்பைக் கலந்தாள். தட்டைப் போட்டு மூடிவிட்டு மாவுக்கருகில் வந்தாள்.

ஆர்வக் கோளாறினால் சாதிக்காவும், ஹஸினாவும் வந்து நின்றார்கள். மாவைப் பிசைந்து கொண்டிருக்கும் சாலிஹாவிடம், ‘மாமி நாங்க என்ன செய்ய?’ என்று வினவினார்கள்.

‘நான் கொழுக்கட்டை பிடிப்பதுபோல் பிடிங்க. ஹஸினா! கொஞ்சம் குழம்பை அள்ளி மாவில் ஊற்றுமா. இறுக்கமாவோ, நெவுப்பாவோ இல்லாமல் பிடிமா!’ என் றாள்.

கொழுக்கட்டை ரெடியானது. கொதிக் கும் குழம்பில் ஒவ்வொன்றாக இறக்கினாள். தீயைக் குறைத்து வைத்து மூடி னாள். மீத மாவையும் உருண்டை பிடித்தார்கள். தக்கடியின் மணம் வீட்டில் கமகமக்க ஆரம்பித்தது.

‘மாமி..! குஜராத் பிள்ளைகளின் கதை யைச் சொல்லுங்களேன். நீங்க பாட்டுக்கு போயிருவீங்க!’

‘சொல்லுறேன் கேளுங்க!யாரும் அழுதிடாதீங்க..2002இல் குஜராத்தில வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டு ரத்த ஆறு ஓடுச்சு.முஸ்லிம்களைத் தேடிப் பிடித்துக் கொன்னாங்க இந்துத்துவா வெறியர்கள். முஸ்லிம்கள் மொத்தமா வாழ்ற இடங்களைக் குறிவெச்சு அழிச்சாங்க. பெண்களை வன்புணர்ந்தாங்க.உயிரைக் காப்பாத்த தப்பிச்சுப் போனவங்களைத் துரத்திச் சென்று கொன்னாங்க..அதுல ஒன்னுதான்..’

- சாலிஹா சொல்லத் தொடங்க மரு மகள்கள் கவலை தோய்ந்த முகத்துடன் கேட்கத் தொடங்கினார்கள்.

(தொடரும்)


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர தொடர்

மேலும் தேடல்